;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (28.02.2018)

0

இன்றும் மழையிடன் கூடிய காலநிலை..!!

நாட்டின் வான்பரப்பில் ஏற்பட்ட ஒரு அலைபோன்ற தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சி தொடருமென்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் ஓரளவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேற்கு, தென், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேல், கிழக்கு, ஊவா, மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மாத்தளை, பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில பகுதிகளில் 100 மி.மீக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையிலான ஓரளவு காற்று வீசக்கூடும்.

தெற்கு மற்றும் தென்கிழக்கு கடற்பரப்பில் காணப்படும் இயங்குநிலை மேகக்கூட்டங்கள் காரணமாக காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய அதிக சாத்தியம் காணப்படுகின்றது.

அவ்வேளையில் கடல் சடுதியாக கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகமானது சடுதியாக மணித்தியாலத்துக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்ககூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இடிமின்னல் தாக்கங்களிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அலோசியஸ், பலிசேனவின் மீள்பரிசீலனை மனு மார்ச் மாதம் விசாரணைக்கு..!!

அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தமது பிணை தொடர்பான மீள்பரிசீலனை மனுவை மார்ச் மாதம் 9 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பர்பசுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தமது பிணை தொடர்பான மீள்பரிசீலனை மனு ஒன்றை பெப்ரவரி 26 ஆம் திகதி தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.

கங்காராம பெரஹெரா – விசேட போக்குவரத்துத் திட்டமொன்று அமுல்..!!

கொழும்பு கங்காராம விகாரையின் நவம் பெரஹெரா, இன்றும் (28) நாளையும் (01) நடைபெறவுள்ளது.

இதனால், கங்காராம விகாரையைச் சூழவுள்ள வீதிகளில், இன்றும் நாளையும் மாலை 5 மணிமுதல், விசேட போக்குவரத்துத் திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, நவம் வீதி, பெரஹர மாவத்தை, டபிள்யூ.ஏ.டீ. ராமநாயக்க மாவத்தை, முத்தையா வீதி, ஸ்ரீ ஜினரத்தன மாவத்த, ஹூனுபிட்டிய வீதி, பிரேவ்புரூக் வீதி, பார்க் வீதி, ஸ்டெப்ல் மாவத்தை உள்ளிட்ட வீதிகள் மாலை 5 மணியிலிருந்து தற்காலிகமாக மூடப்படும்.

இதனால் ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ளும் வகையில் பொதுமக்களை மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்..!!

குருநாகல் – அநுராதபுரம் பிரதான வீதியில் தம்புத்கேம பொலிஸ் சந்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

வருடாந்த இடமாற்றம் நாளை முதல் அமுலில்..!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாகப் பிற்போடப்பட்ட கிழக்கு மாகாண, இணைந்த சேவை உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றம், நாளை (01) முதல் அமுலுக்கு வரவுள்ளதென, கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் ஜே.ஜே. முரளிதரன், கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

2018 ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவிருந்த குறித்த இடமாற்றங்கள், தேர்தல் காரணமாக இன்று 28ஆம் திகதிக்குத் தற்காலிகமாகப் பிற்போடப்பட்டன.

இது குறித்து, கிழக்கு மாகாண பிரதிப் பிரதிச் செயலாளர் ஜே.ஜே. முரளிதரனால் கிழக்கு மாகாணத்திலுள்ள திணைக்களத் தலைவர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்கள் ஆகியோருக்கும், சகல செயலாளர்களுக்கும் ஏற்கெனவே கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண இணைந்த சேவை உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றக் கட்டளை, தேர்தல் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கமைய பிற்போடப்பட்டிருந்தது என, பிரதிப் பிரதம செயலாளர் ஜே.ஜே. முரளிதரன் தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டு வருடாந்த இடமாற்றத்துக்காக ஏற்கெனவே கோரப்பட்ட விண்ணப்பத்துக்கமைவாக, மாகாண முகாமைத்துவ உதவியாளர் சேவை, மொழிபெயர்ப்பாளர் சேவை, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சேவை, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர் சேவை, சாரதிகள் சேவை, அலுவலகப் பணிப்பாளர் சேவை என்பவற்றைச் சேர்ந்தவர்களே, வருடாந்த இடமாற்றத்துக்கு உட்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − five =

*