;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (03.03.2018)

0

ஸ்ரீலங்கா மீது அதிருப்தியில் கனடா

சிறிலங்காவில் அமைதி, நல்லிணக்கம், அரசியல் உறுதிப்பாடு, மனித உரிமைகள் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலில் மெதுவான முன்னேற்றங்களே காணப்படுவதாக கனடா குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து கனடா ஏமாற்றமடைந்துள்ளது என்று கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா பிரிலான்ட் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நடந்து வரும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது அமர்வில், கடந்த 27ஆம் நாள் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“சிறிலங்காவில் 26 ஆண்டுகால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது ஒரு முக்கியமான தருணமாகும். ஆனால் அது முதற்படி மாத்திரமே.

பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் காயங்கள் ஆற்றப்படாமல் விரக்தியில் உள்ளனர். உண்மையான நல்லிணக்கம் அடையப்பட வேண்டும்.

மேலதிக அமைதி, நல்லிணக்கம், அரசியல் உறுதிப்பாடு, மனித உரிமைகள் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலில் மெதுவான முன்னேற்றங்களே காணப்படுவது குறித்து கனடா ஏமாற்றமடைந்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் உள்ளிட்ட போரினால் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் வகையில், பொறுப்புக்கூறும் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கனடாவின் எதிர்பார்ப்பை சிறிலங்கா அரசாங்கத்துக்கு இன்று வலியுறுத்த விரும்புகிறேன்.

தெளிவான காலஅட்டவணை மற்றும் மூலோபாயத்துக்கு ஏற்ப தமது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துமாறும், சிறிலங்கா மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படவும், மதிக்கப்படவும் வேண்டும் என்றும் நாங்கள் சிறிலங்கா அரசாங்கத்திடம் தொடர்ந்து அழைப்பு விடுக்கிறோம்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அடுத்த அரசியல் இலக்கு இதுதான் – திலகராஜ்

கல்வி மற்றும் வீடமைப்பு விடயங்கள் தேசிய நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளமை போன்று மலையக மக்களின் சுகாதார வசதிகளை தேசியமயப்படுத்துவதே தமிழ் முற்போக்கு கூட்டணியின் அடுத்த அரசியல் இலக்கு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வூட்டில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.

மலையகப் பெருந்தோட்ட மக்கள் அரச சேவைகளை நேரடியாகப் பெற்றுக்கொள்ளாமையே அவர்களின் அபிவிருத்தி பின்னடைவுக்கு பிரதான காரணமாகும்.

பெருந்தோட்டப் பாடசாலைகள் முறைமையில் இருந்த மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு அரச திணைக்களங்களின் ஊடான கல்வி வாய்ப்புகள் மிக தாமதமாகவே கிடைக்கப்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீடமைப்பு விடயங்களை முன்னெடுக்க மலைநாட்டு புதிய கிராமங்களுக்கான அதிகார சபை விரைவில் அமையவுள்ளது.

இந்த நிலையில், பெருந்தோட்ட சுகாதார துறை இன்றும் பெருந்தோட்ட முகாமைத்துவங்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

இதனை தேசிய மட்டத்தில் அரச மருத்துவ துறையில் இணைப்பதே தமிழ் முற்போக்கு கூட்டணியின் அடுத்த இலக்காகும் என நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய வானிலை..! 5 மாகாண மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மாகாணம் , மட்டக்களப்பு , அம்பாறை , பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இவ்வாறு மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் , வட மாகாணத்தை தவிர்ந்து நாட்டின் ஏனைய மாகாணங்களில் இன்று பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல் ,சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி , மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதேபோல் , மழை பெய்யும் போது கடற்பிரதேசங்களில் மணிக்கு 80 கிலோமீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம ;்எதிர்வு கூறியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + nine =

*