;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (10.03.2018)

0

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் புதிய சட்டமுறைகள்

சமூக வலைத்தளங்கள் தொடர்பில் புதிய சட்டமுறைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராவதாக சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தாம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேசிய போது அவர் குறித்த வலைத்தளங்கள் ஜெர்மன் மற்றும் பிரித்தானியாவில் எவ்வாறு இயக்கப்படுகின்றன என்பதை ஆராயுமாறு தம்மை பணித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையிலேயே புதிய சட்டங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக அமைச்சர் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் வைபர் ஆகிய சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலேயே அமைச்சர் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஐ.நா அரசியல் விவகாரங்களுக்கான பிரதி செயலாளருடன் கூட்டமைப்பு சந்திப்பு.

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் அவர்களுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுமந்திரன், ஆகியோர் அடங்கிய குழுவினருக்கும் இடையில் நேற்று (09.03.2018)பாராளுமன்ற கட்டிட தொகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றது.

அண்மையில் இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல்களின் பின்னரான அரசியல் நிலவரம் குறித்து உதவி செயலாளர் நாயகம் அவர்களை இரா.சம்பந்தன் அவர்கள் தெளிவுபடுத்தினார்.

இந்த நிலவரம் குறித்து கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன் அவர்கள் தற்போதைய அரசாங்கமானது, அது பெற்றுக்கொண்ட மக்கள் ஆணையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியதோடு, எக்காரணம் கொண்டும் அந்த ஆணையினை நிறைவேற்றுவதிலிருந்து விலக முடியாது எனவும் தெரிவித்தார்.

மேலும் இந்த அரசாங்கமானது புதிய அரசியல் யாப்பு உருவாக்க செயற்ப்பாடுகளை கைவிட்டுவிட முடியாது எனவும், அப்படியாக இச்செயற்பாடுகள் கைவிடப்படுமேயானால் இவ் அரசாங்கமானது இலங்கை ஒரு தனிபிரிக்கமுடியாத, பிரிபடாத நாடு என்னும் அடிப்படையில் ஒரு அரசியல்யாப்பினை உருவாக்குவதற்காக இலங்கை பாராளுமன்றத்தினால் புதிய அரசியல் யாப்பினை உருவாக்கும் முகமாக ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அமுல்படுத்த தவறியுள்ளது என்றே பொருள்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் இந்த செயற்பாடுகளில் சர்வதேச சமூகம் ஆக்கபூர்வமான பங்களிப்பினை வழங்க வேண்டும் எனவும்தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப்பேரவையின் தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன் அவர்கள், அத்தீர்மானம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் சரியாக நிறைவேற்றுவதனை உறுதி செய்யும் வகையில் சர்வதேச சமூகம் நெருங்கிய ஈடுபாட்டினை அரசாங்கத்தோடு கொண்டிருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில் காணப்பட்ட தேவையற்ற இழுத்தடிப்புகள் காரணமாக மக்கள் அரசாங்கம் மீதும் அதனது கட்டமைப்புகள் மீதும் நம்பிக்கை இழந்து வருகிறார்கள் என தெரிவித்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் அவர்கள், இந்த தீர்மானங்கள் மேலும் இழுத்தடிப்புகளின்றி நிறைவேற்றப்படுவதனை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் இலங்கையின் தேசியபிரச்சினைக்கு ஒரு நிரந்தரதீர்வினை காணும்பணியில் சர்வதேச சமூகம் தமிழ்மக்களுக்கு உதவுவதில் கடமைப்பட்டுள்ளது எனவும் வலியுறுத்தினார்.

இலங்கை ஜனாதிபதியுடன் தான் இந்த கருமங்கள் தொடர்பில் தனது கரிசனையை தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவித்த உதவி செயலாளர் நாயகம் அவர்கள் தனது விஜயத்தின் முடிவில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் ஆணையாளரையும் தான் தெளிவுபடுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

கொழும்பு – யாழ்ப்பாணம் புகையிரதத்திற்குள் சிறுநீர் பரவுவதால் அவதிப்படும் பயணிகள்.

கொழும்பில் இருந்து இரவு நேர தபால் புகையிரதத்தில் யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் பயணிகள் சிறுநீர் மற்றும் நீர் புகையிரதத்தின் உட்பகுதிக்குள் செல்வதால் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தபால் புகையிரதத்தில் ஒதுக்கப்பட்ட ஆசன பகுதிகளில் பயணிக்கும் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகுவதனை அவதானிக்க முடிந்துள்ளது. புகையிரத கழிப்பறை கட்டமைப்பு அசுத்தமாக உள்ளமையினால், புகையிரத கழிப்பறையை பயன்படுத்தும் சந்தர்ப்பத்தில் சிறுநீர் மற்றும் நீர் ரயிலின் உட்பகுதிக்குள் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

500 ரூபாய் செலுத்தி ஆசனம் ஒதுக்கி சுதந்திரமாக பயணிக்க எதிர்பார்க்கும் பயணி ஒருவர் முழு இரவும் கழிப்பறை கழிவுகளுடனே பயணிக்க நேரிடும் சூழல் ஒன்று உருவாகியுள்ளது.

அத்துடன் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட ஆசனத்தை கண்டுபிடித்து கொள்ள முடியாத வகையில் ஆசனங்களில் பென்சிலில் கீறப்பட்டுள்ளமையினால் வயோதிபர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ரயில் பெட்டிகளுக்குள் உள்ள சிறிய பூச்சிகள் மற்றும் எறும்புகளினால் சிறுவர்கள் பாதிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 4 =

*