;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (11.03.2018)

0

கண்டியில் மூடப்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் நாளை திறப்பு

கண்டி மாவட்டத்தில் அமைதி நிலை நாட்டப்பட்டு, சுமுகநிலை ஏற்பட்டு வருவதனால் நாளை (12-ம் திகதி)
மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக மத்திய மகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தில் கடந்த திங்கட் கிழமை முதல் அசாதாரண சூழ்நிலை நிலவியதனால் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பாடசாலைகள் மூப்பட்டிருந்தன. அத்துடன் பிரதான பாடசாலைகளுக்கு மத்தியில் நடத்துவதற்கு தீர்மானிக்கபட்டிருந்த வருடாந்த கிரிக்கெற் சமர் உட்பட இன்னும் சில வைபவங்களும் கால வரையறையின்றி பிற்போடப்பட்டிருந்து.

இவ்வாறான நிலையில் தற்போது கண்டி மாவட்டத்தில் அமைதி நிலை நாட்டப்பட்டு, சுமுகநிலை ஏற்பட்டு வருவதனால் நாளை மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சிறுவர் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

உலகில் சிறுவர் திருமணங்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இலங்கையில் சிறுவர் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் வாழும் ஒருசில சமூகத்தினரிடையே இந்த சிறுவர் திருமணங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இருப்பினும் ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இலங்கையில் சிறுவர் திருமணங்கள் எண்ணிக்கை குறைந்தளவாகவே காணப்படுகின்றது.

மேலும், சிறுவர் திருமணங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தப்படுமெனவும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை சேர்த்தல் நாளை

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முக பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது.

இந்தமுறை கல்வியியல் கல்லூரிகளுக்கு 4 ஆயிரத்து 745 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வியமைச்சின் ஆசிரியர் கல்விக்கு பொறுப்பான பிரதான ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார தெரிவித்துள்ளார்.

இதற்காக 32 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

நேர்முக பரீட்சை தேசிய கல்வியியல் கல்லூரி மட்டத்தில் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள 19 கல்வியியல் கல்லூரிகளுக்கு 27 பாடநெறிகளுக்காக மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உணவு ஒவ்வாமை காரணமாக 98 பேர் பாதிப்பு

உணவு ஒவ்வாமை காரணமாக யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையை சேர்ந்த கடற்தொழிலாளர்கள் 98 பேர் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, பரிமாறப்பட்ட உணவை உண்ட நிலையிலேயே இவர்கள் சுகவீனத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பாதிப்படைந்தவர்கள் வாந்தி மற்றும் வயிற்று நோவுக்கு உள்ளானதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

பாதிப்படைந்தவர்களில் 45 பேர் சிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 3 =

*