;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (15.03.2018)

0

உள்ளூராட்சி புதிய உறுப்பினர்களின் பெயர் அடங்கிய வர்த்தமானி

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி தேர்தல் மூலம் தெரிவான புதிய அங்கத்தவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பெண் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.எல்.ரட்நாயக்க தெரிவித்துள்ளதுடன் புதிய உள்ளுராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாவதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அரசாங்க அச்சகர் கங்கானி கல்பனா லியனகே தகவல் தருகையில்,

“புதிய உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை இன்று நள்ளிரவுக்குள் வெளியிட முடியும். தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன” என்றார்.

மன்னாரில் பெய்த மழை காரணமாக பல கிராமங்களில் வெள்ளம்

மன்னாரில் நேற்றையதினம்(14-03-2018) புதன் கிழமை மாலை பெய்த மழையின் காரணமாக மன்னாரில் தாழ்வு பிரதேசத்தில் காணப்படும் பல குடியிருப்பு பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளா் தெரிவித்தாா்.

குறிப்பாக அண்மையில் காணி வழங்கப்பட்டு குடியமர்த்தப்பட்ட சில கிராமங்களும் நீரில் மூழ்கியுள்ளது.

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட சாந்திபுரம் , ஜீவபுரம், ஜிம்ரோன் நகர் , எமில் நகர் போன்ற கிராமங்களில் உள்ள வீடுகளும் , பாதைகளும் நீரில் மூழ்கி காணப்படுவதாக எமது செய்தியாளா் தெரிவித்தாா்.

இதனால் குறித்த கிராமங்களில் உள்ள பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடனும் தொடர்ச்சியாக மழை நீடித்தால் குறித்த கிராமங்களில் உள்ளவர்கள் இடம் பெயர வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும் என தெரிய வருகின்றது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விரைவில்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விரைவில் முன்வைக்க கூட்டு எதிர்கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் தலைமையில் நேற்று (14) இரவு நடைபெற்ற கூட்டத்தில் இந்த விடயம் பற்றி கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கலந்துரையாடலில் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காலநிலை

இலங்கையின் மேற்கு பகுதியில் அராபியக் கடற்பரப்பில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது கொழும்பிலிருந்து 950 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக வளி மண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது வலுவிழந்து நாட்டை விட்டு மேலும் விலகி செல்லக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே நாட்டிலும் மேற்கு கடற்பரப்பு வானிலையிலும் இதன் தாக்கம் மிகவும் குறைவாகும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக அப்பிரதேசங்களில் காற்றும் வீசக்கூடும். மின்னலிலிருந்து ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சுதந்திரக் கிண்ண சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தெரிவு

சுதந்திரக் கிண்ண சுற்றுத்தொடரின் நேற்றைய போட்டியில் பங்களாதேஷை தோற்கடித்த இந்தியா இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

சுற்றுத்தொடரின் ஐந்தாவது போட்டி நேற்று கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 3 விக்கட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை பெற்றது.

பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.

இதன் பிரகாரம் இந்தியா 17 ஓட்டங்களால் வெற்றி பெற்று, ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

நாளை இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன. இது சுற்றுத்தொடரின் அரையிறுதிப் போட்டியாக அமையவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − nine =

*