;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (15.03.2018)

0

அபிவிருத்தி திட்டங்கள் பல மக்கள் பாவனைக்கு கையளிப்பு

படையினரால் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் பல மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சுக்கு உட்பட்ட தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சு இந்த அபிவிருத்தித் திட்டங்களுக்காக 654 மில்லியன் ரூபா நிதியை செலவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வலி.வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவில் தையிட்டி, மயிலிட்டி, வறுத்தலைவிளான், பலாலி, சண்டிலிப்பாய் பிரதேசங்களில் படையினரால் கட்டம் கட்டமாக அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் 19 உள்ளக வீதிகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இதில் 11 வீதிகள் கடந்த 5 ஆம் திகதி மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. இதற்கான செலவினம் 51 மில்லியன் ரூபா என தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்தார்.

பலாலி தெற்கு வீட்டுத் திட்ட உள்ளக வீதி, தாழையடி வீதி, குகன் வீதி, வைரவர் உள்ளக வீதி, சிவன் உள்ளக வீதி, வேலன் உள்ளக வீதி உள்ளிட்ட பல வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு கடந்த காலங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட பலாலி வடக்கு, ஊறணி, பொலிகண்டி மற்றும் அராலி ஆகிய இடங்களிலும் இறங்குதுறை மற்றும் படகு கட்டும் இடங்களுக்குமாக 296 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் பொருட்டு கரவெட்டி வேதாரணிய வித்தியாலயத்திற்கு இதன் கீழ் 2 மாடிக் கட்டிடங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

யாழ் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கு கணனி ஆய்வுகூட அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கும் நிதி செலவிடப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்ககழகத்தில் நெகிழும் தன்மையுடன் கூடிய செயற்கை கால்களை தயாரிப்பதற்கான கற்கை வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு 9 மில்லியன் ரூபா செலவில் நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

2018 ஆம் ஆண்டுக்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மதியம் 2.00 மணிக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதற்கான அழைப்புக்கடிதங்கள் உரிய திணைக்கள தலைவர்களுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.பரமேஸ்வரன் தெரிவித்தார்.

தற்போது பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டங்கள் பிரதேச செயலக ரீதியாக நடைபெற்று வருவதுடன் பிரதேச செயலக ரீதியாக தீர்வு காண முடியாத விடயங்கள் மற்றும் மாவட்டத்தினுடைய அபிவிருத்தி திட்டங்களின் போக்கு உட்பட பல விடயங்கள் இதன்போது ஆராயப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்தார்.

ஏப்ரல் முதல் வாரத்தில் புத்தாண்டு சுபநேர பஞ்சாங்கம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

தமிழ், சிங்களப் புத்தாண்டு தொடர்பான சுபநேர பஞ்சாங்கம் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.

இது தொடர்பிலான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கலாசார அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் திருமதி அனுஷா கோகுல பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உடைந்து விழும் நிலையிலுள்ள மின்கம்பம் : கண்டுகொள்ளாத அதிகாரிகள்

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்தின் பிரிவின் கல்மதுரை தோட்டம் இரண்டாம் இலக்க குடியிருப்பு பகுதியில் உக்கிய நிலையில் காணப்பட்ட மின்கம்பம் ஒன்று குடியிருப்பு மீது விழுந்துள்ள நிலையில் மின் கம்பங்களை மாற்றி தருமாறு லிந்துலை மின்சார சபைக்கு அறிவித்த போதிலும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையென பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 20 திகதி பெய்த கடும் மழையினால் மின்கம்பம் முறிந்து குடியிருப்பு மீது விழுந்துள்ளது.இதனால் இக்குடியிருப்பு பகுதியில் வாழும் சுமார் 25 குடும்பங்களை சேர்ந்த 50ற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.

இதேவேளை மின் கம்பிகளும், வீடுகளின் கூரை மேல் விழுந்து காணப்படும் நிலையில் மின் கம்பங்களை மாற்றி தருமாறு லிந்துலை மின்சார சபைக்கு அறிவித்த போதிலும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

முறிந்து விழுந்த மின் கம்பம் நடை பாதையில் உள்ளதால் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக தோட்ட தலைவர்களிடமும், தோட்ட அதிகாரிகளிடமும் தெரிவித்தபோதும் அவர்கள் இப்பிரச்சனையை கண்டுகொள்ளவில்லையென அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனா்.

இதேவேளை தேர்தல் காலங்களில் தங்களுடைய வீடுகளுக்கு வாக்கு கேட்டு வந்தவர்களிடம் இப்பிரச்சனைகளை தெரிவித்தபோது தேர்தல் முடிந்தவுடன் இதனை மாற்றி தர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த அவர்களும் இதனை கண்டுகொள்ளவில்லையென இவர்கள் கவலை அடைகின்றனர்.

எனவே இப்பிரச்சனையில் இருந்து எங்களை பாதுகாக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இங்குள்ள மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + 9 =

*