;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!! (15.03.2018)

0

மட்டக்களப்பில் மக்களின் காணிகளை அபகரிக்க முயன்ற தனி நபர்.

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பகுதியில் தமது காணிகளுக்கு தனி நபர் ஒருவர் உரிமை கோரி காணிகளை அபகரிக்க முயல்வதாக கிராம மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மட்டக்களப்பில் மக்களின் காணிகளை அபகரிக்க முயன்ற தனி நபர்..!
இதனை தடுத்து தமது காணிகளை மீட்டுத்தருமாறு கோரி கிராம மக்கள் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பகுதியில் அமைந்துள்ள ஈஸ்ற்றன் சீற்றன் தேட்டப் பகுதியில் குடியிருப்புக்களையும் வர்த்தக நிலையங்களையும் அமைத்து மிக நீண்ட காலாமாக மக்கள் வசித்து வருகின்றனர்.

இந் நிலையில் தமது காணிகளை தற்போது வேறு ஒருவர் உரிமை கோரி அபகரிக்க முற்படுவதாக கிராம மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதனைத் தடுக்குமாறு கோரி பொதுமக்கள் இன்று வியாழக்கிழமை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றை ஒப்படைத்துள்ளனர்.

சுமார் 50 வருடங்களுக்கு மேலாக குறித்த காணிகளில் தாம் குடியிருப்பதாகவும்இ தற்போது 200 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் நிரந்தரமாக குடியிருந்து வரும் இந்நிலையில் தனி நபர் ஒருவர் காணிக்கு உரிமை கோருவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

காணிகளுக்குரிய சட்ட ரீதியான ஆவணங்கள்இ தம்மிடம் இருக்கின்ற நிலையில் குறித்த நபர் காணிகளைச் சுவீகரிக்க முற்படுவது சட்டத்திற்கு முரணானது எனவும் கோரி பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

இது குறித்து தாம் ஆராய்ந்து முடிவெடுப்பதாக பிரதேச செயலாளர் இதன்போது பொதுமக்களிடம் வாக்குறுதியளித்ததாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் சதம் கடந்து பிறந்தநாள் கொண்டாடிய மூதாட்டி; தற்போதைய வயது இதுதான்

நாகம்மா என்ற மூதாட்டிக்கு 104வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டுள்ளது.

46 வருடங்களாக தேயிலைத் தொழிற்துறையில் கடமையாற்றிய குறித்த மூதாட்டிக்கே இவ்வாறு சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு 104வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தாயான நாகம்மாவிற்கு களனிவெலி தொழிற்சாலையினால் தொடர்ந்து ஐந்து வருடங்களாக பிறந்த தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், அவரின் 104வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தோட்டத் தொழிலார்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டதுடன் 104வது வயதிலும் ஆரோக்கியமாக வாழும் மூதாட்டியைப் பார்த்து ஆச்சர்யமடைந்துள்ளனர்.

களனிவெலி நிர்வாகத்திற்கு உட்பட்ட டிலரி தோட்டத்தை சேர்ந்த நாகம்மா 46 வருடங்களாக தேயிலை தோட்டத்தில் தொழிலாளியாக கடமையாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏறாவூரில் புகையிரதம் மீது கல்லெறிவோரைக் களையெடுக்குமாறு வேண்டுகோள்

அறிவற்ற விதத்தில் புகையிரதப் பயணிகளுக்கு அச்சத்தையும் பீதியையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும் வகையில் ஏறாவூரில் கல்லெறியும் குற்றவாளிகளை கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்துமாறு புகையிரத நிலைய அதிகாரிகள் ஏறாவூர் பொலிஸாரையும் பொது அமைப்புக்களையும் பொதுமக்களையும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக ஏறாவூர் புகையிரதப் பாதையை ஒட்டியுள்ள பள்ளிவாசல்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரங்களை மேற்கொள்ளுமாறும் அந்த அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

சமீப சில நாட்களாக கொழும்பு – மட்டக்களப்பு, மட்டக்களப்பு கொழும்புக்கிடையிலான நகர் சேர் சாதாரண மற்றும் கடுகதிப் புகையிரதங்கள் ஏறாவூரைக் கடக்கும்போது சில கும்பல்கள் ஆங்காங்கே நின்று புகையிரதக் கண்ணாடிகளை நோக்கி கல் மண் என்பனவற்றை வீசுவருவது பற்றி பொலிஸாருக்கும் புகையிரதத் திணைக்களத்தற்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக புகையிரத நிலைய அதிகாரிகளும், ரயில்வே பணியாளர்களும் கருத்துத் தெரிவிக்கும்போது….

புகையிரதப் பயணம் அநேகமானோருக்கு மன மகிழ்ச்சியையும் சௌகரியத்தையும் தரக் கூடியது என்பதால் பெரும்பாலானோர் புகையிரதப் பயணத்தைத் தெரிவு செய்கிறார்கள்.

குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், கர்ப்பிணித் தாய்மார், வயோதிபர்கள், நோயாளிகள் இப்படிப்பட்டோர் மிகுந்த பாதுகாப்பு சௌகரிய நம்பிக்கையுடன் புகையிரதப் பயணத்தை மேற்கொள்ளும் போது சில விஷமிகள் தமது அறிவீனத்தால் புகையிரத கண்ணாடிகளை நோக்கி கல், மண் என்பனவற்றை வீசி அச்சத்தையும், பீதியையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்துகின்றனர்.

புகையிரத ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து கண்கள் உட்பட பயணிகளின் ஏனைய அவையவங்களைக் காயப்படுத்தக் கூடும், சிலவேளை இத்தகைய காயங்கள் நிரந்தர அங்கவீனமாகவும் மாறிவிடக் கூடும்.

நாடு தற்போது எதிர்நோக்கியிருக்கும் சிக்கலான கொந்தளிப்பான நிலைமையில் இத்தகைய விசமத்தனமான செயற்பாடுகள் இருக்கும் நிலைமைகளை இன்னும் சிக்கலாக்கி விடக் கூடும்.ஆகவே, இதுபற்றி ஒட்டு மொத்த சமூகமும் அக்கறை எடுக்க வேண்டும்.

இத்தகைய நாசகாரச் செயல்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இந்த விடயத்தில் ஏறாவூர் பொலிஸாரும் ஏறாவூரிலுள்ள சமூக நல அமைப்புக்களும் பள்ளிவாசல் மற்றும் பொது நிறுவனங்களும் கவனம் எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்ந்தும் மீன்பிடி நடவடிக்கையை முன்னெடுக்கலாம் – நீதவான் அனுமதி

மன்னார் – சம்பன் பாஞ்சான் கடற்பகுதியில் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் மீனவர்கள் மேற்கொண்டு வந்த கடற்தொழில் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க மன்னார் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மன்னார் நீதிமன்ற நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா நேற்று புதன்கிழமை கடற்தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கியுள்ளார்.

மன்னார் மாவட்டத்தின் விடத்தல் தீவிற்கு அண்மித்த கள்ளாற்றிற்கு தெற்கு பகுதியில் அமைந்துள்ள சம்பன் பாஞ்சான் கடற்பகுதியில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் மீனவர்களால் மீன்பிடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனினும், கடந்த 10ஆம் திகதி சனிக்கிழமை கடலில் வைத்து எந்தவித அறிவித்தல்களும் இன்றி மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளரின் உத்தரவிற்கு அமைய ‘சிறகு’ வலைத் தொழிலுக்கான வலைத்தொகுதிகள் கடலில் இருந்து அகற்றப்பட்டன.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணைகள் நேற்று புதன்கிழமை மன்னார் மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்றது.

இதன் போது, மீன்பிடி நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்க நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா அனுமதி வழங்கியுள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி வழக்குகளை மன்றில் தாக்கல் செய்ய வேண்டாம் எனவும், மன்றில் முன்னிலையாகியிருந்த மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு கடுமையாக எச்சிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, நீரியல் வளத்துறை திணைக்கள உத்தியோகத்தர்கள் கடலில் இருந்து ஒரு தொகுதி வலைகளை மட்டுமே அப்புறப்படுத்திய நிலையில், ஏனைய வலைகள் திருடப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், பொலிஸார் எந்த நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில், அடம்பன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நீரிழிவு நோயாளர்களுக்கான மருத்துவ உபகரணங்களுக்கு கட்டுப்பாட்டு விலை

நீரிழிவு நோயாளர்களின் இரத்தத்தில் காணப்படும் சீனியின் அளவை பரிசோதனை செய்வதற்காக பயன்படுத்தும் உபகரணங்கள் பலவற்றின் விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த உபகரணங்கள் பல மாறுபட்ட விலைகளில் விற்பனை செய்யப்படுவது கண்காணிப்பு மூலம் தெரிய வந்துள்ளதால் இந்நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார்.

அதன்படி நீரிழிவு நோயர்களின் இரத்தத்தில் காணப்படும் சீனியின் அளவை பரீட்சிக்கும் குளுக்கோஸ் பெல்ட்கள் (Glucose Stripes) மற்றும் சாதனங்களின் விலைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளன.

குளுக்கோஸ் பெல்ட்கள் 25 அடங்கிய பக்கட் ஒன்று 1,500 ரூபாவிலிருந்து அதிக விலைக்கு சந்தையில் விற்கப்படுவதுடன், இரத்தத்தில் காணப்படும் சீனியின் அளவை பரீட்சிக்கும் சாதனம் ஒன்று 2,500 ரூபாவிலிருந்து மாறுபட்ட விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் கட்டணங்களை கட்டுப்படுத்திய பின்னர் புற்றுநோயாளர்கள் பயன்படுத்தும் மருந்து வகைகளின் விலைகள் கட்டுப்படுத்தப்பட உள்ளதுடன், அதன்பின்னர் நீரிழிவு நோயாளர்கள் பயன்படுத்தும் உபகரணங்களின் விலைகளை கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × one =

*