;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (16.03.2018)

0

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான தீர்மானமிக்க போட்டி இன்று

சுதந்திர வெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரில் இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான தீர்மானமிக்க போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும்.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும்.

போட்டி பற்றி விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.

இதில் கருத்து வெளியிட்ட இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்ஹ, பந்து வீச்சுத் துறையில் மாற்றத்தை மேற்கொள்ளப் போவதாக கூறினார்.

தமிழ் இனப்படுகொலை நடந்தது; ஜெனிவாவில் வெளிப்பட்ட மற்றுமோர் ஆதாரம்

இறுதிப் போரின்போது தமிழ் மக்களுக்கு எதிராக பாரிய இனப்படுகொலை ஒன்று இடம்பெறதாக ஈழத் தமிழ் பெண் ஒருவர் ஜெனிவாவில் கூறியுள்ளார். ஜெனிவா மனித உரிமை பேரவையில் நடைபெற்ற உபகுழுக்கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் குறிப்பிட்டதாவது,

”நான் அரச மருந்ததாளராக கிளிநொச்சி வைத்தியசாலையில் பணியாற்றியபோது ஷெல் தாக்குதல் இடம்பெற்றதை காணமுடிந்தது. மருத்துவமனை மீதும் தாக்குதல்கள் இடம்பெற்றன. கால்கள், கைகள், கண்கள் இன்றி காயமடைந்த நிலையில் பல மக்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

யுத்தத்தின்போது தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றதை நான் கண்டிருக்கின்றேன். மல்லாவி வைத்தியசாலையில் 1996ஆம் ஆண்டு முதல் அரச மருந்தாளராக பணியாற்றினேன். நான் அங்கு சேவையில் இருக்கும்போது அதிகளவான காயமடைந்த மக்கள் சிகிச்சை பெற வந்தனர்.

அரசாங்கம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு மருந்துகளை அனுப்புவதற்கு கடமைப்பட்டிருந்தது. ஆனால் எமக்குத் தேவையான முழுமையான மருந்துகளை அரசாங்கம் அனுப்பவில்லை. குறைந்தளவான மருந்துகளே எமக்கு கிடைத்தன.

பல குறைபாடுகள் காணப்பட்டன. மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் மின்பிறப்பாக்கியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமே வழங்கும். மருந்து குறைப்பாடு ஏற்பட்டபோதும் செஞ்சிலுவை சங்கம் உதவியது.” என்றார்.

இதுகுறித்து மேலும் குறிப்பிட்ட அவர், மல்லாவி வைத்தியசாலை அமைந்திருந்த பகுதியில் ஷெல் தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும் பல மருத்துவ அதிகாரிகள் கடமையை புறக்கணித்து சென்றதாகவும் கூறினார்.

இவ்வாறு கடமையைப் புறக்கணித்துச் சென்றவர்களை நாம் குறைகூற முடியாது என தெரிவித்த அவர், தமது உயிரை அவர்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது முக்கியமானதாகும் என்றார்.

பின்னர் 2004ஆம் ஆண்டிலிருந்து 2008ஆம் ஆண்டு வரை கிளிநொச்சி வைத்தியசாலையில் பணியாற்றியதாகவும் குறிப்பிட்டார்.

இக்காலப்பகுதியில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, முள்ளிவாய்க்கால் பகுதிகளில் யுத்தம் தீவிரமடைந்து ஆயிரக்கணக்கானோர் காயமடைந்ததாகவும், தாம் கிளிநொச்சி வைத்தியசாலையில் பணியாற்றியபோது ஷெல் தாக்குதல் இடம்பெற்றதை காணமுடிந்தது என்றும் கூறினார்.

ரணிலுக்கு எதிராக அடுத்த வாரம் சபையில் பிரேரணை; மஹிந்த தெரிவிப்பு

அடுத்த வாரம் கூடுகின்ற நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பணியாற்றுகின்ற வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் மஹிந்த ராஜபக்ச நேற்று வியாழக்கிழமை இரவு கொழும்பில் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

இதன்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஒன்றிணைந்த எதிர்கட்சியினரால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாகவும், இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள சில உறுப்பினர்களும் விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ச கூறினார்.

எதிர்கட்சியாக பெயரளவில் மாத்திரம் செயற்பட்டு வருகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை இந்தப் பிரேரணைக்குப் பெறுவதற்கு எதிர்பார்க்க முடியாது என்ற போதிலும், ஏனைய உறுப்பினர்களது ஆதரவுகளைத் திரட்டுவதற்கும் உத்தேசித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவு சரிந்து விட்டது என்பது ஒரு மாயை

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவு சரிந்து விட்டது என்பது ஒரு மாயை என்பதை விளங்கிக் கொள்ளக்கூடியதாக உள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் நேற்று (15) வியாழக்கிழமை காலை இடம் பெற்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட நிலையில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,,,,

தற்போது இருக்கின்ற அரசியல் சூழ்நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருக்கின்ற மக்களை மாவட்டம் தோறும் சென்று சந்தித்து அவர்களின் அபிப்பிராயங்களை நாங்கள் பெற்றுக்கொண்டு வருகின்றோம்.

இதன் அடிப்படையில் திருகோணமலை,மட்டக்களப்பு, அம்பாறை,முல்லைத்தீவு,வவுனியா ஆகிய மாவட்டங்களிலே நாங்கள் ஏற்கனவே சந்திப்புக்களை நடத்தி அவர்களுடைய கருத்துக்களை அறிந்திருக்கின்றோம்.

அந்த வகையிலே இன்று (15) நாங்கள் மன்னார் மாவட்டத்திற்கு மக்களை சந்திக்க வந்தோம்.
காலை முதல் அதிகமான மக்கள் இங்கு வந்து தமது கருத்துக்களை கூறிச் சென்றுள்ளனர்.

மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் எங்களின் மக்கள் பிரதி நிதிகளை நாங்கள் அழைத்து மக்களின் கருத்துக்கள் தொடர்பாக அவர்களுக்கு தெரியப்படுத்தி பல்வேறு செயல் திட்டத்தை அமுல் படுத்தி எமது கட்சியை இன்னும் பலமான கட்சியாக எதிர் காலத்தில் செயல் படுத்துவதற்கு ஏற்ற வழி முறைகளை ஏற்படுத்திக் கொள்ள இச் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.

மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்போடு இன்னும் அதிக அளவு ஒரு மித்தவர்களாக உள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

நடை பெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஒரு சரிவு ஏற்பட்டுள்ளதை மேலோட்டமாக பார்க்கப்பட்ட போதும் அது இத்தேர்தலின் இயல்பு என்று சொல்லக்கூடிய வகையிலே பலர் மாறாகவே வாக்குகளை வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. எதிர்வரும் தேர்தல்களிலே தாங்கள் எங்கு நின்றார்களோ அந்த இடத்திற்கே மீண்டும் வந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வெற்றிக்காக உழைப்போம் என்ற விடையத்தை தெரிவித்துள்ளனர்.

எனவே ‘தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவு சரிந்து விட்டது என்பது ஒரு மாயை’ என்பதை நாங்கள் விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

தற்போது இருக்கின்ற இச்சூழ்நிலையில் மக்கள் அபிவிருத்தியை நோக்கிய விடையங்களிலும் அக்கரையாக இருக்கின்றார்கள். அந்த விடையங்களை செய்ய வேண்டிய கடற்பாடு எங்களுடைய உறுப்பினர்களுக்கு இருக்கின்றது.

இந்த வகையிலே எங்களுடைய உறுப்பினர்கள் அனைவரும் அதிகமாக வேலை செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். மக்களினுடைய தொடர்புகளை இன்னும் நெருக்கமாக வைத்துக் கொள்ளக் கூடியவர்களாகவும், தமது பிரசன்னத்தை மக்களின் இடங்களில் அதிகலவில் செலுத்தக்கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள்.

ஏனைய மாவட்டங்களிலும் சென்று மக்களின் அபிப்பிராயங்களை பெற்ற பின் எமது அறிக்கையை எமது உயர் சபைக்கு சமர்ப்பிப்போம்.

அதன் பின்னர் கட்டமைப்பை உறுவாக்குதல் என்கின்ற செயற்பாட்டிற்கு வந்து இன்னும் எமது செயற்பாடுகளை முன் நின்று செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + ten =

*