;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (19.03.2018)

0

புலிகளின் இராணுவம் மிகவும் ஒழுக்கமானது: இந்தியப் படை அதிகாரி

தமிழீழ விடுதலைப் புலிகளின் ராணுவம் மிகவும் ஒழுக்கமானது எனக் கூறுவதில் தமக்கு எந்த ஒரு தயக்கமும் இல்லை என இந்திய அமைதிப் படையில் பணியாற்றிய அதிகாரி உன்னி கார்தா தெரிவித்துள்ளார்.

1987-89 ஆம் ஆண்டு இந்திய அமைதிப் படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரிகள் 9 பேரை கொண்ட குழு அண்மையில் இலங்கை சென்று திரும்பியது. அப்போது இந்திய அமைதிப் படை முகாமிட்டிருந்த வடக்கு பகுதிகளுக்கும் அக்குழு சென்று பல்வேறு இடங்களைப் பார்வையிட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைதிப் படை முன்னாள் அதிகாரியான உன்னி கார்தா கூறியதாவது,

அமைதிப் படை காலத்தில் விமானத்தில் இலங்கைக்கு அடிக்கடி பயணித்தேன். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மிக ஒழுக்கமானவர்கள் என்பதை வெளிப்படுத்த ஒருபோதும் தயங்கமாட்டேன்.

திருவனந்தபுரம், சூலூர் விமான படை தளங்களில் இருந்து யாழ்ப்பாணம் பலாலி விமான தளத்துக்கு பயணித்திருக்கிறேன். வடக்கு பகுதி மக்களுக்கு உணவுப் பொட்டலம் வீசிய ஆபரேஷன் பூமாலையும் நினைவில் இருக்கிறது.

இவ்வாறு உன்னி கார்தா கூறினார்.

பாக்குநீரிணையைக் கடக்கப் பயிற்சி எடுத்துவரும் நீச்சல் வீரர்

இலங்கையின் தலைமன்னாரில் இருந்து பாக்குநீரிணை ஊடாக தனுஸ்கோடியின் அரிச்சல்முனையை நீந்திக் கடப்பதற்கான பயிற்சிகளை இந்திய நீச்சல் வீரர் ஒருவர் மேற்கொண்டுள்ளார்.ஆந்திர மாநிலத்தில் பொலிஸ் காவலராக பணியாற்றி வரும் துளசிஜாத்தனியா என்ற நீச்சல் வீரர் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளார்.

இலங்கையின் தலைமன்னார் முதல் இந்திய எல்லையான தனுஸ்கோடியின் அரிச்சல்முனையை பாக்குநீரிணை கடல் வழியாக எதிர்வரும் 25 ஆம் திகதி நீந்திக் கடப்பதற்கு இந்திய நீச்சல் வீரரான துளசிஜாத்தனியா திட்டமிட்டுள்ளார்.இதற்கான பயிற்சிகளை சங்குமால் கடற்கரையில் அவர் மேற்கொண்டுவருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இலங்கையின் தலைமன்னார் கடற்கரையில் இருந்து தனுஸ்கோடி அரிச்சல்முனை வரை நீந்தி செல்வதற்கான அனுமதி கோரி கடந்த மாதம் டெல்லியில் உள்ள வெளியுறவுதுறை மற்றும் பாதுகாப்புதுறை அமைச்சகத்திற்கு துளசிஜாத்தனியா கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்தக் கடிதத்தை பரிசீலனை செய்த இந்திய அரசாங்கம் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் இலங்கை அரசாங்கத்திடம் அனுமதி பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து தலைமன்னாரும் செல்லும் துளசிஜாத்தனியா எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை ஒரு மணியளவில் தலை மன்னார் கடற்கரையில் இருந்து நீச்சலை ஆரம்பித்து, அன்று பிற்பகல் 11 மணி முதல் 12 மணிக்குள் தனுஸ்கோடி அரிச்சல்முனையை நீந்தி கரை சேர அவர் எதிர்பார்த்துள்ளார்.

அதற்கான நீச்சற் பயிற்சியை இன்று அதிகாலை முதலே இராமேஸ்வரம் அருகே உள்ள சங்குமால் கடற்கரையில் அவர் மேற்கொண்டு வருகிறார்.

ஸ்ரீலங்காவில் இருந்து பாக்குநீரிணை ஊடாக இந்தியாவிற்கு செல்வதற்கு அவர் திட்டமிட்டுள்ளதாகவும் மார்ச் 25 ஆம் திகதி ஒரு மணியளவில் ஆரம்பித்து முற்பகல் 11 தொடக்கம் 12 மணிக்குள் நிறைவுசெய்ய அவர் எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்த மேற்படி இந்திய நீச்சல் வீரர், நான் நேற்று இங்கு வந்து பயிற்சிகளை மேற்கொண்டுவருகின்றேன்.கடந்த ஆறு மாதங்களாக நாளாந்தம் பயிற்சிகளை மேற்கொண்டுவருகின்றேன்.

பயிற்றுவிப்பாளர் மற்றும் உதவிப் பயிற்றுவிப்பாளர் ஆகியோரின் உதவியுடன் இந்தப் பயிற்சிகளை நான் மேற்கொண்டுவருகின்றேன்.ஜெலி மீன்கள், பாம்புகள், நச்சுப் பாம்புகள் மற்றும் பல நஞ்சு உயிரினங்கள் இருக்கும்.

உயரழுத்த மின்சாரமும் இருக்கும். அது நேரத்திற்கு நேரம் மாறுபடும். இதனை சாதாரணமான ஒன்றாக எதிர்பார்க்க முடியாது. கடலைகளும் அதிகளவில் இருக்கும். கடவுளின் ஆசீர்வாதத்துடன் சிறந்த வேகத்துடன் பாக்குநீரிணையை கடக்க முடியும் என்றார்.

மக்கள் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி வழங்கிய ஆலோசனை இதுதான்

பண்புமிக்க உயர் பெறுமதியான அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்காக மக்கள் பிரதிநிதிகள் தமது நடத்தைகளாலும் செயற்பாடுகளாலும் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

குறித்த கால அட்டவணைக்கேற்ப மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு தமது உயரிய பங்களிப்பை மக்கள் பிரதிநிதிகள் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அதன்போது பொதுமக்களுடன் பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்ளாது கொள்கைகளுக்கு உட்பட்டு பொறுமையாகவும் அவதானத்தோடும் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினதும் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

பொதுமக்களின் குரலுக்கு செவிசாய்த்து அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்ளும் செயற்பாடுகளில் ஊழல் மோசடியற்று செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளால் பின்னடைவிற்கு உட்படாது குறைபாடுகளை நிவர்த்திசெய்து சரியான வலுவான அரசியல் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்நோக்கி கொண்டுசெல்ல இந்த பிரதிநிதிகள் கட்சிக்கு வலுசேர்ப்பார்கள் என்றும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற சபை அமர்வுகளில் இயன்றளவு கலந்துகொண்டு தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவித்து மக்களின் சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களினூடாக தொடர்ச்சியாக அறிவைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்குமாறு மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, அதனூடாக சிறந்தவொரு அரசியல் எதிர்காலத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

பிரதேசத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்கி, அவற்றின் முன்னேற்றம் தொடர்பாக மதிப்பீடு செய்து தேவையாயின் மேலும் நிதி வழங்க தாம் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதி வழங்கினார்.

ஜனாதிபதி உள்ளிட்ட கட்சித் தலைவர்களின் முன்னிலையில் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் தூய்மையான அரசியல் இயக்கத்தில் உண்மையாகவும் அர்ப்பணிப்புடனும் ஈடுபடுவதாக உறுதிமொழி வழங்கினர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, பைஸர் முஸ்தபா, துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட அமைச்சர்களும் இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்தனர்.

ஆளுநர்கள், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண முதலமைச்சர்கள், மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெரும்தொகையானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + 14 =

*