;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (19.03.2018)

0

இந்த ஆண்டில் கடற்றொழிலாளர் பற்றிய முறையான தொகை மதிப்பீடு

கடற்றொழிலாளர் பற்றிய முறையான தொகை மதிப்பு இவ்வாண்டில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கான ஆலோசனையை கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர கடற்றொழில் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.

இலங்கையில் முதல் தடவையாக 1976 ஆம் ஆண்டில் மீனவர்கள் தொடர்பான தொகை மதிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் பின்னர் 42 வருடங்களாக தொகை மதிப்பு மேற்கொள்ளப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சரியான தரவுகளை திரட்ட தொகை மதிப்பை மேற்கொள்வது அவசியமாகும். கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் விபரம் குடும்ப வருமானம், வாழ்க்கைத்தரம் போன்றவற்றை அறிந்து கொள்ள இது உதவும்.

இலங்கையின் உயர்மட்டக் குழு இன்று ஜெனீவா பயணம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக, இலங்கையின் உயர்மட்டக் குழு சுவிற்சர்லாந்தின் தலைநகர் ஜெனீவாவுக்கு இன்று பயணமாகவுள்ளது.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்குகின்றார்.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் பொறுப்புக்கூறல் மூலம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அர்ப்பணிப்புகள் குறித்தும் இதன் போது தெளிவுபடுத்தப்பட உள்ளது.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் செயற்பாடுகள், பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான சட்டத்திற்குப் பதிலாக மாற்று உத்தேச சட்டமூலம் குறித்து மாநாட்டில் இலங்கைத் தூதுக்குழுவினர் விடயங்களைத் தெளிவுபடுத்த உள்ளனர்.

அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் இலங்கை கடற்படைக்கப்பலுக்கு புதிய இரு இயந்திரங்கள்

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் இலங்கை கடற்படை கப்பலுக்கான புதிய இரண்டு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இப்புதிய இயந்திரங்கள் இரண்டையும் கடற்படை அதிகாரிகளின் பிரதி அதிகாரி மற்றும் கடற்படை நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர், ரியர் எட்மிரல் பியால் டீ சில்வாவிடம் , இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் ப்ரைசீ ஹட்சன் வழங்கினார்.

காலியிலுள்ள தக்ஷின கடற்படை கப்பல் தளத்தில் இந்த நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.குறித்த இயந்திரங்களை கடற்படை கப்பல் ‘மிஹிகாதா’ விற்கு பொருத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் உட்பட தென்பிராந்திய கடற்படைத் தளபதி, ரியர் எட்மிரல் கபில சமரவீரா மற்றும் ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பாகிஸ்தான் – இலங்கை மகளிர் கிரிக்கட் போட்டி நாளை ஆரம்பம்

பாகிஸ்தான் மற்றும் இலங்கை மகளிர் கிரிக்கட் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச போட்டித்தொடர் தம்புள்ள விளையாட்டு மைதானத்தில் நாளை ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் மூன்று ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த மூன்று போட்டிகளும் 20 , 22 , 24ஆம் திகதிகளில் ரன்கிரி விளையாட்டுமைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளுக்கிடையிலான ரி20 போட்டிகள் மூன்று நடைபெறவுள்ளன. இந்த போட்டித்தொடரில் , எதிர்வரும் 28ஆம் திகதி முதலாவது போட்டி கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்திலும் , இரண்டாவது போட்டி மார்ச் 30ஆம் திகதி என்சிசி மைதானத்திலும் மற்றும் மூன்றாவது போட்டி மார்ச் 31ஆம் திகதி எஸ்எஸ்சி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளன.

நாளை ஆரம்பமாகவுள்ள இந்த போட்டித்தொடர்கள் எதிர்வரும் 31ஆம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கு தங்குமிடவசதி

அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்பக் கல்லூரியில், முழுமையான கற்கை நெறியை தொடரும் மாணவர்களின் தங்குமிட பிரச்சினைக்குத் துரித தீர்வைப் பெற்றுக் கொடுக்க நிர்வாகம் உடன்பட்டிருப்பதாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த கல்வி நிறுவனத்தின் மாணவர்களின் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் கபீர் ஹாஷிம், இரு தரப்பினர்களின் கருத்துக்களை கவனத்திற் கொண்டு, மாணவர்களுக்குத் தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு ஆலோசனை வழங்கினார்.

இதற்கமைய, முழுமையான கற்கை நெறியைப் பின்பற்றுவதற்காகப் பதிவு செய்துள்ள அனைத்து மாணவர்களுக்கும், தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்படுமென்று, பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஹிலரி ஈ சில்வா தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × two =

*