;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (20.03.2018)

0

கடந்த ஆண்டில் 8511 காச நோயாளர்கள்

2017ம் ஆண்டில் இலங்கையில் 8511 காச நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், அதில் 8113 பேர் புதிதாக கண்டறியப்பட்ட நோயாளர்கள் என்றும் சுகாதார மேம்பாட்டுப் பிரிவு கூறியுள்ளது.

அதேவேளை காச நோய் மற்றும் எச்.ஐ.வி தொற்று ஆகிய இரண்டு நோயினாலும் பாதிக்கப்பட்ட 24 பேர் கடந்த 2017ம் ஆண்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதிகமான காச நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் அவர்களின் எண்ணிக்கை 3601 பேர் என்றும் தெரிய வந்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 2051 காச நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அது நூற்றுக்கு 24% ஆக உள்ளது.

காச நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அதனை முழுமையாக குணப்படுத்த முடியும் என்று வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

காலநிலை

தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களுக்குள் (இன்றிலிருந்து) படிப்படியாக குறையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை காணப்படும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில ;பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

காலியிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

காற்றானது கிழக்கு முதல் வட கிழக்கு வரையான திசைகளில் இருந்து மணித்தியாலத்துக்கு 20 – 30 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும்.

யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம் ஊடாக நீர்கொழும்பு வரையானகரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40 – 45 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் ஜனாதிபதி ஆர்வம் – எதிர்க்கட்சித் தலைவர்

தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அரசாங்கமும் தயாராக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண ஜனாதிபதி ஆர்வத்துடன் செயற்படுகிறார். ஆனால், பல சவால்களை சமாளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சவால்களை வென்று மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பார் என்று நான் நம்புகின்றேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய தொழில் நுட்பக் கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான பணிகள் ஒவ்வொரு வருடமும் டிசம்பரில் பூர்த்தி

எதிர்வரும் ஒவ்வொரு வருடமும் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கான அனைத்து பணிகளையும் டிசம்பர் மாதத்திற்குள் பூரத்தி செய்ய கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளது.

இதற்கமைவாக பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணி டிசம்பர் மாதம் பூர்த்தி செய்யப்படும்.

பரீட்சை ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் முதலாம் வாரத்தில் ஆரம்பிக்கப்படும். விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி உடனடியாக ஆரம்பிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்காக பரீட்சை பணிகளில் ஈடுப்படுத்தப்படும் சுமார் 30ஆயிரம் ஆசிரியர்களை பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியிலும் ஈடுப்படுத்த கல்வி அமைச்சும் பரீட்சை திணைக்களமும் தீர்மானித்துள்ளது.

பாடசாலை செல்லாத மாணவர்களின் எண்ணிக்கை நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகம்

பாடசாலை செல்லாத மாணவர்கள் நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகளவில் காணப்படுகின்றனர்.

பாடசாலை செல்லாத மாணவர்களில் குறைவாக எண்ணிக்கையை கொண்ட மாவட்டம் யாழ்.மாவட்டம் என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டில் பாடசாலை கல்வியை கற்க வேண்டிய வயதை கொண்ட பிள்ளைகளில் 3.4 சதவீதமான பிள்ளைகள் ஒருநாளேனும் பாடசாலைக்கு செல்லவில்லை என்று தொகை மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

5 வயதிற்கும் 20 வயதிற்கும் இடைப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்த வயதிற்குட்பட்ட 95 சதவீதமானோர் பாடசாலை கல்வியை தொடர்வதாக இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + 13 =

*