;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (21.03.2018)

0

ஸ்ரீலங்காவிற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கும் : சுமந்திரன் நம்பிக்கை

பொறுப்புக்கூறல் தொடர்பான ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் ஸ்ரீலங்கா அரசு காண்பித்துவரும் அக்கறையிண்மை தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ள அமெரிக்கா, ஜெனீவா அமர்வுகளின் போது கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்கும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா அரசினால் நிறைவேற்றப்படாத யுத்தக் குற்றங்கள் உட்பட மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காக 2015 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை வழங்க இணக்கம் தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உலகத் தமிழர் பேரவையினருடன் இணைந்து நேற்று ஜெனீவாவிற்கான அமெரிக்காவின் உயர் அதிகாரியை சந்தித்திருந்தது.

அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரில் இடம்பெற்ற இந்த சந்திப்பை அடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்தக் கருத்தை தெரிவித்தார்.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பில் இன்றைய தினம் ஆராயப்படவுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் சகிதம் அமெரிக்க உயர் மட்ட அதிகாரிகளை சந்தித்துள்ளார்.

உலகத் தமிழர் பேரவையின் சார்பில் அதன் தலைவர் அருட்தந்தை இமானுவெல், சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் சுரேன் சுரேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஜெனீவாவிற்கான அமெரிக்காவின் துணைத் தூதுவர் கெலி கெரியுடனான சந்திப்பின் போது 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஸ்ரீலங்கா அரசு நடைமுறைப்படுத்தாது இருப்பது தொடர்பில் கவலைவெளியிட்ட தமிழ் பிரதிநிதிகள் குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வைப்பதற்கான அழுத்தங்களை பிரயோகிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதற்கு அமெரிக்க இராஜதந்திரி கெலி சாதகமான பதிலைத் தெரிவித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை தமிழ் பிரதிநிதிகள் அண்மையில் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்த்மன் உட்பட ஐ.நா அதிகாரிகளையும் சந்தித்துள்ளனர்.

இடை நடுவில் நிறுத்தப்பட்ட தங்க வேட்டை அகழ்வு பணி

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடத்தில் தங்கம் தேடி தோண்டும் நடவடிக்கை ஒன்று நேற்று (20) மாலை முன்னெடுக்கப்பட்டு முடிவுறாத நிலையில் திகதி குறிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலைப்புலிகளால் நிலத்தடி அகழியில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் இடத்தில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனிஸ்குமார் முன்னிலையில் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போர் நடைபெற்ற காலத்தில் குறித்த தனியார் காணியில் விடுதலைப்புலிகளின் முகாம் ஒன்று காணப்பட்டுள்ளது என்றும் அதன்படி நிலத்தின் கீழ் பாரிய பதுங்கு குழி ஒன்று அமைத்து அதில் பெறுமதியான நகைகள் புதைத்து வைத்துள்ளதாகவும் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகலை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலிஸார் நீதிமன்றில் குறித்த பகுதியினை தோண்டுவதற்கான அனுமதியினை கோரியுள்ளார்கள்.

இந்நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸார், நீதிபதி, அரச அதிகாரி, படை அதிகாரி, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் நேற்று (20) பிற்பகல் 2.00 மணிதொடக்கம் 4.00 மணிவரை கனரக இயந்திரம் கொண்டு தோண்டியவேளை நேரம் போதாத காரணத்தால் குறித்த தோண்டும் நடவடிக்கையினை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

அதுவரையும் குறித்த பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.

நுவரெலிய நகர் மட்டத்தில் குடிநீரை சுத்திகரிப்பதற்கு உச்சக்கட்ட நடவடிக்கை

நுவரெலிய நகர் மட்டத்தில் குடிநீரை சுத்திகரிப்பதற்கு உச்ச அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நுவரெலிய மாநகர சபை ஆணையாளர் கே.எம்.டபிள்யு.பண்டார தெரிவித்துள்ளார்.

நீரை சுத்திகரிப்பதற்கு புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. நகருக்கு விநியோகிக்கப்படும் நீரை சேமித்து வைத்து அவற்றை சுத்திகரித்து குடிநீர் பாவனைக்கு வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக இந்த விடயம் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தது. இதனால் நுவரெலியா நகரவாழ் மக்கள் குடிநீர் பாவனையில் பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.

இவற்றைக் கருத்திற்கொண்டு நுவரெலியா நகர்வாழ் மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்த சுத்திகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

இந்த பிரதேசத்தில் ஏற்கனவே இருந்த சுத்திகரிப்பு பொறிமுறை மிகவும் பழமை வாய்ந்தது. இதனால் பல பிரச்சினைகள் எழுந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டினுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து

ரஷ்ய ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் மகத்தான வெற்றியை ஈட்டிய ஜனாதிபதி விளாதிமிர் புட்டினுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ரஷ்ய ஜனாதிபதியின் வெற்றி அவரது அரசியல் தலைமைத்துவம் அரசியல் முதிர்ச்சி என்பனவற்றின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது.

இருதரப்பு உறவுகளை தொடர்ந்தும் வலுப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொது இலக்குகளை அடைந்து கொள்வதற்கான வாய்ப்புக்களும் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஜா-எல ஆடைத்தொழிற்சாலையின் நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை.

கவனயீனமாகச் செயற்பட்ட ஜா-எல- ஏக்கல பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலையின் நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொலிசார் தீர்மானித்துள்ளனர்.

தொழிற்சாலையில் நேற்றும் ஏற்பட்ட காஸ் ஒழுக்கினால் 47 ஊழியர்கள் சுகயீனமடைந்து கம்பஹா றாகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டார்கள்.

காஸ் ஒழுக்கைச் சீர் செய்யும் வரை தொழிற்சாலையை தற்காலிகமாக மூடிவிடுமாறு பொலிசார் நிர்வாகத்திற்கு நேற்று முன்தினம் அறிவித்திருந்தாலும் அறிவித்தலையும் மீறி அவர்கள் ஆடைத் தொழிற்சாலையைத் திறந்திருக்கிறார்கள்.

நேற்று மீண்டும் ஏற்பட்ட காஸ் ஒழுக்கினால் 52 பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை தொழிற்சாலையை மூடிவிடுமாறு நீர்கொழும்பு நீதிமன்றம் பொலிசாருக்கு இன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 3 =

*