;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (22.03.2018)

0

புகையிரத சேவைகள் பாதிப்பு

நேற்று இரவு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து பதுள்ளை நோக்கி பயணித்த தபால் புகையிரதம் தெமேதர – எல்ல புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது.

இதனால் மலையக பகுதிகளுக்கு பயணிக்கும் புகையிரத சேவைகள் தடைபட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது.

பேருந்து ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்

சிலாபம் – கொழும்பு தனியார் பேருந்து ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

தனியார் பேருந்து ஊழியர் ஒருவரை தாக்கிய சம்பவம் காரணமாகவே இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை மீண்டும் இரத்துச் செய்யப்படுமா?

மனித உரிமைகள் விவகாரத்தில் தற்போதைய ஸ்ரீலங்கா அரசாங்கம் முன்னேற்றம் கண்டுள்ளதாக நம்பி ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை மீண்டும் இரத்துச் செய்யப்படக் கூடிய ஆபத்து இருப்பதாக பிரித்தானிய அரசின் ஆசிய விவகாரங்களுக்கான துணை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை அடுத்து ஏழு வருடங்களாக நிறுத்தப்பட்டிருந்த ஜி.எஸ்.பி வரிச் சலுகை கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் ஐரோப்பிய ஒன்றியம் ஸ்ரீலங்காவிற்கு மீள வழங்கியிருந்தது.

ஸ்ரீலங்காவின் பொறுப்புக் கூறல் மற்றும் உண்மைக்கான ஆணைக்குழுவை நிறுவுதல் தொடர்பிலான விவாதமொன்று பிரித்தானிய நாடாளுமன்றில் நேற்றைய தினம் இடம்பெற்றது.

இந்த விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பிரித்தானிய ஆளும் மற்றும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனித உரிமைகள் விடையத்திலும் பொறுப்புக்கூறல் தொடர்பிலும் ஸ்ரீலங்கா அரசு எந்தவித முன்னேற்றத்தையும் வெளிப்படுத்தவில்லை என குற்றம்சாட்டினர்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு தனது இணக்கத்தை வெளிப்படுத்திய பிரித்தானிய அரசின் ஆசிய விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் மார்க் பீல்ட்ஸ் ஸ்ரீலங்கா அரசு தொடர்ந்தும் இவ்வாறு செயற்பட்டால் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரச் சலுகையை மீண்டும் இழக்க நேரிடும் என்று எச்சரித்தார்.

மனித உரிமைகள் விவகாரங்களில் ஸ்ரீலங்கா அரசு வெளிப்படுத்திய ஓரளவு முன்னேற்றத்தை அடிப்படையாக வைத்தே அதற்கு சன்மானமாக ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீள வழங்க தீர்மானிக்கப்பட்டதாகக் கூறிய பிரதி அமைச்சர் மார்க் பீல்ட்ஸ், எனினும் இது பிரச்சனைகளில் இருந்து தப்பிச் செல்வதற்கான அனுமதி என ஸ்ரீலங்கா அரசு கருதுமானால் அது தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டதாகவே அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்காவின் பொருளாதார வளர்ச்சி தடையின்றி முன்னேறிச் செல்வதற்கு சாதகமான வரிச் சலுகை அமைந்ததாக சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானிய பிரதி அமைச்சர், அந்த அனுமதியை தவறாக புரிந்துகொள்ளக் கூடாது என்றும் கோடிகாட்டியுள்ளார்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்ரீலங்கா நிறுவுவது தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவரான ஆளும் கன்சவேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் போல் ஸ்கெலி உரையாற்றுகையில், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை ஸ்ரீலங்காவிற்கு முன்கூட்டியே வழங்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த விவாதத்தில் கலந்துகொண்ட பிரித்தானிய எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் ரயன் உரையாற்றுகையில், ஸ்ரீலங்காவிற்கு ஜி.எஸ்.பி வரிச் சலுகை மீள வழங்கப்பட்டிருக்கக்கூடாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றில் இடம்பெற்ற இந்த விவாதத்தின் போது ஸ்ரீலங்காவில் அண்மையில் முஸ்லீம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறைகள் தொடர்பிலும் ஆளும் மற்றும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் கண்டனத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தினர்.

கண்டி மாவட்டத்தில் தமிழ் சிங்கள மக்களுக்கிடையில் இடம்பெற்ற வன்முறைகள் அல்ல என்று குறிப்பிட்ட பிரித்தானிய அரசின் ஆசிய விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் மார்க் பீல்ட்ஸ், அது ஏனைய இனங்களுக்கு எதிராக சிங்களவர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் என அடையாளப்படுத்தினார்.

ஸ்ரீலங்காவிற்கு கடந்த ஒக்டோபர் மாதம் விஜயம் செய்திருந்த போது, ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபனவை சந்தித்து நிரந்தர சமாதானம் மற்றும் நீண்டகால அபிவிருத்திக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் வலியுறுத்திக்குறிப்பிட்டிருந்ததாக பிரித்தானிய அரசின் ஆசிய விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் மார்க் பீல்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

அரசியல் சாசன மறுசீரமைப்பின் ஊடாக அதிகாரப் பரவலாக்களை மேற்கொள்வது, நம்பிக்கையளிக்கும் வகையில் நிலைமாறுகால நீதிப் பொறிமுறையை நிறுவுதல், இராணுவம் உட்பட அரச படையினர் கையகப்படுத்தி வைத்துள்ள மக்களின் காணிகளை விடுவித்தல, பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்தல், மனித உரிமைகளை மதிக்கம் சட்டங்களை நடைமுறைப்படுத்தல் ஆகியன இவற்றில் முக்கியமானவையாக இருந்ததாகவும் பிரித்தானிய அரசின் ஆசிய விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் ஸ்ரீலங்கா அரசின் நடவடிக்கைகள் கடும் அதிருப்திக்கு உள்ளாகும் வகையில் மந்தமாகவே இருப்பதாக ஜெனீவா அமர்வில் குறிப்பிடபடபோவதாகவும் பிரித்தானிய அரசின் ஆசிய விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் மார்க் பீல்ட்ஸ் அறிவித்திருந்தார்.

பாகிஸ்தான் குடியரசு தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள ஜனாதிபதி இன்று பாகிஸ்தான் விஜயம்

பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹுசைனின் விசேட அழைப்பை ஏற்று பாகிஸ்தான் குடியரசு தின கொண்டாட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்வதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான நட்புறவை நினைவுகூரும் வகையில் ஜனாதிபதி இந்த நிகழ்வில் கலந்துகொள்வதுடன், அண்மைக் காலத்தில் இலங்கையின் அரச தலைவர் ஒருவருக்கு இதுபோன்றதொரு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

1956ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் திகதி பாகிஸ்தான் மக்கள் குடியரசாக மாற்றப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 23ஆம் திகதி மக்கள் குடியரசு தினமாக கோலாகலமான முறையில் கொண்டாடப்படுகிறது.

இம்முறை இவ்விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொள்ளும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு அமோக வரவேற்பளிப்பதற்காக பாகிஸ்தான் அரசாங்கம் சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின்போது பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹுசைன் மற்றும் பிரதமர் சஹீத்கான் அப்பாஸ் ஆகியோரையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பின் போது இருநாடுகளுக்குமிடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் கல்வி ஆகிய துறைகளில் உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

மேலும் ஜனாதிபதி இவ்விஜயத்தின்போது இருநாடுகளுக்கிடையில் கல்வி மற்றும் சுற்றுலா துறையில் நான்கு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + twelve =

*