;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (23.03.2018)

0

பாடசாலை மாணவர்களுக்கான போஷாக்கு வேலைத்திட்டம்

பாடசாலை மாணவர்களுக்கான போஷாக்கு வேலைத்திட்டம் விஸ்தரிக்கப்படுகிறது.

மேலும் ஆயிரம் பாடசாலைகளை உள்ளடக்கும் வகையில் வேலைத்திட்டம் விஸ்தரிக்கப்படவுள்ளது. இதன்கீழ் சுமார் எண்ணாயிரம் பாடசாலைகளைச் சேர்ந்த 12 இலட்சம் மாணவர்களுக்கு இலவசமாக மதியபோசனம் வழங்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இதற்காக வடக்கு, கிழக்கில் 100 மாணவர்களை விட குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுடன் இயங்கும் பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 630 கோடி ரூபாவாகும்.

பாடசாலை மாணவர்கள் மத்தியிலான போஷாக்கு பிரச்சனைகளை குறைத்து மாணவர்களின் வருகையை அதிகரிக்க வழிவகுப்பதும் சிறந்த உணவு சுகாதார பழக்க வழக்கங்களை ஊக்குவித்து ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குவதும் இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.

காலநிலை

நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையில் குறிப்பாக நாட்டின் கிழக்குப்பகுதியில் எதிர்வரும் 25ஆம் திகதியிலிருந்து மாற்றம் ஏற்படுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலநிலை சீராக காணப்படும்.

எவ்வாறாயினும், இரத்தினபுரி, களுத்துறை காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கொழும்பிலி காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்கரையோரப்பகுதிகளில் சில பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலைவேளைகளில் பனிமூட்டம் நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின்போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக காற்று வீசக்கூடும். இடிமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காலி – புதிய சுற்றுலா வலயம்

காலி மாவட்டத்தின் ரத்கம – அங்குரல பிரதேசத்தில் புதிய சுற்றுலா வலயத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

500 ஏக்கர் விஸ்தீரணமான நிலப்பரப்பில் சுற்றுலா வலயத்தை ஸ்தாபிப்பதன் மூலம் வேலைவாய்ப்புக்களை உருவாக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சுற்றுலா துறை சார்ந்தோருக்கு கூடுதல் வருவாய் மார்க்கங்களை ஏற்படுத்தும் நோக்கத்துடன் திட்டம் அமுலாக்கப்படுகிறது. இதற்கான அளவீட்டு நடவடிக்கைகளும் பூர்த்தியாகி உள்ளன.

பாராளுமன்றம் இன்று கூடுகின்றது.

பாராளுமன்றம் இன்று முற்பகல் 10.30 இற்கு மீண்டும் கூடுகின்றது.

பிரதம நீதியரசர், உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆகியோரின் சம்பள கொடுப்பனவுகளை திருத்தியமைப்பது தொடர்பான தீர்மானங்களை எடுப்பது பற்றியும், உற்பத்தி வரி விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான ஐந்து ஒழுங்குகள் பற்றியும் இன்று விவாதிக்கப்படவுள்ளது.

சிரேஷ்ட ஒலிபரப்பாளரும், ஊடகவியலாளருமான வீ.ஏ.திருஞானசுந்தரம் காலமானார்.

மூத்த ஒலிபரப்பாளரும், ஊடகவியலாளருமான வீ.ஏ.திருஞானசுந்தரம் நேற்று காலமானார்.

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் இயக்குனராகவும் இலங்கை வானொலி தமிழ்ச்சேவைப்பிரிவின் பணிப்பாளராகவும் இவர் கடமையாற்றினார்.

சில நாட்கள் நோய்வாய்ப்பட்டிருந்த திருஞானசுந்தரம், நேற்று கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். இவர் இறக்கும்போது வயது 80 ஆகும்.

அன்னாரது மறைவு தமிழ் பேசும் நல்லுலகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் என துறைசார்ந்தவர்கள் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.

அமரர் திருஞானசுந்தரத்தின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று முற்பகல் 10.00 மணி தொடக்கம் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படும். இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + six =

*