;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (23.03.2018)

0

திருகோணமலை கிண்ணியாவை நோக்கி படையெடுக்கும் மக்கள்-காரணம் இதுதான்

திருகோணமலையிலுள்ள . கிண்ணியாவில் பதனிடப்படும் தூய்மையான கடல் மீன் உப்புக்கருவாடுகளை கொள்வனவு செய்வதற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பொதுமக்களும் வியாபாரிகளும் படையெடுக்கிறார்கள்.

கிண்ணியா கடலில் பிடிக்கப்படும் சிறிய ரக கடல் மீன்களையும் பெரிய ரக மீன்களையும் கருவாடுகளாக்குவதில் இங்குள்ள கருவாடு பதனிடுவோர்களும் மீனவர்களும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

தூய்மையானதாக உடனுக்குடன் பிடிக்கப்படும் மீன்களை கொண்டு இவர்கள் கருவாடு பதனிடுகின்றனர்.மற்றும் நியாயமான விலைகளிலும் இங்கு கருவாடுகள் விற்கப்படுவதால் இங்குள்ளவர்களும் வெளியிடங்களிலுள்ள மக்களும் தூர இடங்களிலுள்ள சந்தை வியாபாரிகளும் இங்கு வந்து நாளாந்தம் கருவாடுகளை வாங்கிச்செல்கிறார்கள்.

திருகோணமலை மாவட்டத்தில் அதிகரித்துக்காணப்படும் வெயில் இக்கருவாடுகளை பதனிடுவதற்கும் கருவாட்டு பதனிடும் தொழிலில் ஈடுபடுவோருக்கும் தற்போது சாதகமானதாக அமைந்திருக்கின்றன.

இலங்கையில் மண்ணெண்ணெய் பாவிப்போர்க்கு கடும் எச்சரிக்கை

இலங்கையில் மண்ணெண்ணெயின் பாவனை திடீரென்று அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 90 கிலோ லீற்றர் மண்ணெண்ணெய் கடந்த வருடமளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு லீற்றர் ஒன்று 44 ரூபாவிற்கு நிவாரண அடிப்படையில் தற்போது வழங்கப்படுவதுடன் லீற்றர் ஒன்றினால் கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு 48 ரூபாய் நட்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த வருடம் மாத்திரம் மண்ணெண்ணெய் விற்பனையால் அரசாங்கத்துக்கு 5.4 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, நிவாரண நோக்கத்தைக் கருத்திற்கொண்டு மானிய அடிப்படையில் வழங்கப்படும் மண்ணெண்ணெயானது, பேரூந்து, மற்றும் பாரவூர்தி ஆகியவற்றிற்கு விற்பனை செய்யப்படுவதாக சில நாட்களின்முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன. குறிப்பாக வடக்கு மாகாணத்தை மையப்படுத்தியே இந்த வர்த்தகம் இடம்பெறுவதாக கூறப்பட்டது.

எவ்வாறாயினும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மண்ணெண்னை கலந்து விற்பனை செய்யப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டால் அதன் அனுமதிபத்திரம் ரத்து செய்யப்படும் என கனிய எண்ணெய் வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க எச்சரித்துள்ளார்.

மாடுகளை சட்டவிரோதமாக கடத்தியவா்களை மடக்கி பிடித்த பொதுமக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிறிய ரக கன்டர் வாகனத்தில் சட்டத்திற்கு முரணாக அனுமதிப்பத்திரம் இல்லாமலும் கொண்டு சென்ற மாடுகளை பொதுமக்கள் சுற்றிவளைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நேற்றையதினம்(22-03-2018) வியாழக்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் இருந்து சிறிய ரக கன்டர் வாகனத்தில் ஏழு மாடுகள் அடைக்கப்பட்ட நிலையில் கொண்டுவரப்பட்டுள்ளது.

சின்னவத்தை பகுதியூடாக இந்த மாடுகளை கொண்டுசென்றபோது அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் குறித்த கன்டர் வாகனத்தை சுற்றிவளைத்து குறித்த மாடுகள் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தினை தொடர்ந்து வெல்லாவெளி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த மாடுகள் மருதமுனைப்பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும், இந்த மாடுகள் மிருக சட்டத்திற்கு முரணாக கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் அனுமதி பத்திரம் இல்லாமலும் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் மாடுகளும் மாடுகள் கொண்டுவந்த வாகனமும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

ரஞ்சன் ராமநாயக்கவின் வழக்கு தொடர்பில் ஆராய உத்தரவு

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான கருத்தை வெளியிட்டாரா என்பது தொடர்பில் ஆராயுமாறு சட்ட மா அதிபருக்கு உயர் நீதிமன்ற உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இலாபமீட்டுவதை விட மக்களுக்கு சேவையாற்றுவதை முதன்மை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும்

இலங்கை தபால் திணைக்களம் இலாபமீட்டுவதை விட மக்களுக்கு சேவையாற்றுவதை முதன்மை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும் என்று தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு டீ.ஆர்.விஜயவர்த்தன மாவத்தையில் அமைந்துள்ள அஞ்சல் தலைமையகத்தில் தபால் திணைக்களம், சம்பத் வங்கியுடன் இணைந்து e-Pay Mobile Cash சேவையை ஆரம்பித்து வைக்கும் போது அவர் இவ்வாறு உரையாற்றினார்.

தபாலகத்தின் காசு கட்டளை சேவையின் ஊடாக பண வைப்பு செய்தவுடன் நாட்டிலுள்ள எந்தவொரு சம்பத் வங்கி ஏரிஎம் வலைப்பின்னலில் இருந்தும் பணத்தை மீளப் பெற முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 2 =

*