;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (23.03.2018)

0

காலி மாநகர சபையின் புதிய மேயராக பிரியந்த சகபந்து தெரிவு

காலி மாநகர சபையின் புதிய மேயராக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரியந்த சகபந்து கொடகே இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த இரகசிய வாக்கெடுப்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரியந்த சகபந்துவுக்கு ஆதரவாக 20 வாக்குகளும் ஐக்கிய தேசிய கட்சியின் ஜிலித் நிஷாந்தவுக்கு 11 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் காலி மாநகர சபைக்கு ஐக்கிய தேசிய கட்சி சார்பாக 14 உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் 13 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீர்கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தயான் லன்சா தெரிவு

நீர்கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தயான் லன்சா வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த வாக்கெடுப்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தயான் லன்சாவுக்கு ஆதரவாக 25 வாக்குகளும் ஐக்கிய தேசிய கட்சியின் ரோஸி பெர்ணான்டோவுக்கு 19 வாக்குகளும் கிடைக்கப்பபெற்றுள்ளன.

நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் நீர்கொழும்பு மாநகர சபைக்கு ஐக்கிய தேசிய கட்சி சார்பாக 19 உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் 16 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணில் விலக வேண்டும்;இல்லையேல் போராட்டம்-விக்ரமசிங்க அறிவிப்பு

இளைஞர்களுக்கு இடங்கொடுத்துவிட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைமையிலிருந்து விலகவேண்டும் என்ற கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பு விடுத்திருக்கிறது.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் செயலாளர் எஸ்.ஆர்.எம். விக்கிரமசிங்க இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 25 வருடகாலமாக கட்சியின் தலைமைப் பதவியை வகித்து வருகிறார் என்பதை சுட்டிக்காட்டிய அவர், இரண்டு தடவைகள் ஜனாதிபதித் தேர்தலில் படுதோல்வியடைந்த தலைவராக தென்னாசிய வலயத்தில் ரணில் விக்கிரமசிங்க பிரபல்யம் அடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

யார் என்னதான் தெரிவித்தாலும் ஒருசிலர் ரணில் விக்கிரமசிங்கவை இன்னும் பாதுகாத்து வருவதாக தெரிவித்த எஸ்.ஆர்.எம். விக்கிரமசிங்க, எவ்வாறாயினும் கட்சித் தலைமைப் பீடத்திலிருந்து விலகும் தருணம் பிரதமருக்கு ஏற்பட்டிருப்பதாகக் கூறினார்.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கட்சி முகங்கொடுத்த தோல்விக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே காரணம் என்று குறிப்பிட்ட அவர், தொடர்ந்தும் தலைவர் பதவியில் அவர்நீடித்தால் அதற்கெதிராக மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்த உத்தேசித்திருப்பதாக தெரிவித்தார்.

தென்னிலங்கை மக்களால் மீண்டும் பாராட்டப்படும் நீதிபதி இளஞ்செழியன்

யாழ்ப்பாணம் சங்கானை ஆலயக்குருக்களைப் படுகொலை செய்த குற்றத்துக்காக, யாழ் மேல் நீதிமன்றின் நீதிபதி இளஞ்செழியன், நேற்றைய தினம் இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட மூவருக்கு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

இந்தச் சம்பவம் தற்பொழுது தென்னிலங்கை மக்களால் பெரிதும் பேசப்படும் விடயமாக காணப்படுகிறது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் நீதிபதி இளஞ்செழியனின் துணிச்சல் மிக்க தீர்ப்பினை பெரும்பாலான மக்கள் பாராட்டியுள்ளனர்.

இருந்தாலும் சிலர் இது ஒரு இராணுவப் பழிவாங்கல் என்ற தோரணையிலும் தமது பதிவினை முற்படுத்தியுள்ளனர்.

தென்னிலங்கையைப் பொறுத்தவரை இராணுவச் சிப்பாயை வடபகுதியில் தண்டிப்பது என்பது பெரும் இனவாதமாகப் பார்க்கப்பட்டுவந்த நிலையில் னீதிபதி அதனையும் தாண்டி இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளார் என சிலர் பதிவிட்டுள்ளனர்.

குறிப்பாக இனவாதக் கட்சிகளாகப் பார்க்கப்படும் சில கட்சியின் அரசியல்வாதிகள் இதனைக் காரணமாக வைத்தே அரசாங்கத்தின்மீதான சேறுபூசும் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கிவிடுவர் என்ற குழப்ப நிலை மத்தியிலும் இந்த தீர்ப்பு மிகச் சரியானதாக அமைந்துள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த சிலர், நீதிபதி இளஞ்செழியன் அநீதியான தீர்ப்பை ஒருபோதும் வழங்கமாட்டார். தப்பு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

இல்லை என்றால் சட்டத்தில் பயனில்லை என குறிப்பிட்டுள்ளதுடன் மரண தண்டனை விதித்தால் மாத்திரம் போதாது சிறையில் உணவளிப்பதற்கு பதிலாக அவர்களைத் தூக்கில் போடுங்கள் என காரசாரமாக பதிவிட்டுள்ளனர்.

இதேவேளை, நீதிபதி இளஞ்செழியன் தமக்கு என்றுமே பெறுமதியானவர் என்றும், அவருக்கு அனைத்துவிதமான சக்திகளும் கிடைக்க வேண்டும் என்றும், தவறு செய்திருந்தால் சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற தராதரம் பாரால் தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 3 =

*