;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (25.03.2018)

0

இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!

இலங்கையில் காச நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகிறது என்று சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு 8 ஆயிரத்து 511 பேர் காச நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இவர்களில் 8ஆயிரத்து 112 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், காசநோயை ஆரம்பத்திலேயே இனங்கண்டு, அதற்குரிய சிகிச்சைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், நோய் தொற்றுக்குள்ளான நபரிடமிருந்து மற்றுறொரு நபருக்கு இந்த நோய் பரவக் கூடியது எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோர விபத்தில் இளைஞர் மூவர் பலி

மாதம்பே குளியாப்பிட்டிய பகுதியில் உடுபத்தாவ – தும்மலசூரிய பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர்கள் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இளைஞர்கள் மூவரும் மோட்டார் சைக்கிளில் ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முற்பட்ட வேளையிலேயே, குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 18 வயது மற்றும் 19 வயதுடைய இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தானது நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, நேற்றைய தினம் (24) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்தநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தின், தீர்வையற்ற கடைத் தொகுதி பிரிவில் பணியாற்றும் நபர் எனவும், 41 இலட்சம் ரூபாய் ​பெறுமதி வாய்ந்த, சவூதி ரியால் 500 நாணயத்தாள்கள் 200 ஐ வைத்திருந்ததற்கு அமைவாக, கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த, 30 வயதுடைய குறித்த சந்தேகநபர், தன்வசம் வைத்திருந்த பணத்தை பிறிதொரு நபருக்கு கொடுப்பதற்காகவே வைத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

சகவாழ்வு அமைச்சின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில், நடமாடும் சேவை, தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று காலை 8.30 மணிமுதல் நடைபெற்றது.

தலவாக்கலை, லிந்துலை, கூமூட், பெயாவெல், நாகசேனை, ரட்ணகிறி, சமர்செட், ஒலிரூட், டெவோன் மற்றும் கொட்டகலை டிரைட்டன் ஆகிய பத்து கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்கள் நன்மையடையும் வகையில் இந்தநடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டதாக, நுவரெலியா மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.

இந்த நடமாடும் சேவையில் பிறப்பு சான்றிதழை சட்டரீதியாக மொழி பெயர்த்து கொடுத்தல், பிறப்பு சான்றிதழில் உள்ள பிழைகளை அடையாளம் கண்டு அவற்றை திருத்துதல், பிறப்பு சான்றிதழின் புதிய பிரதிகளை வழங்குதல், விவாகமாகாத தம்பதியினரை சட்டவூர்வமாக விவாகம் செய்து வைத்தல், ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு, நீர் மற்றும் மின்சாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு என பல சேவைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நடமாடும் சேவைக்கு நுவரெலியா மாவட்ட பிரதேச மற்றும் நகர சபைகள், பொலிஸ் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி, மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட நிறுவனங்கள் தமது பங்களிப்பை வழங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + 11 =

*