;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (29.03.2018)

0

உதயங்கவை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை ஆரம்பம் : அரசாங்கம்..!!

டுபாய் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ள ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்கைக்குக் கொண்டு வருவதற்கான இராஜதந்திர நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அரசாங்கம் , இதேபோன்று விரைவில் அர்ஜுன் மகேந்திரனும் கொண்டு வரப்படுவார் என குறிப்பிட்டுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்கள் அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று புதன் கிழமை அரசாங்க தகவல் தினைக்களத்தில் இடம்பெற்றது.

இதன்போது மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

இதன் போது உரையாற்றிய அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுகையில் ,

உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. சர்வதேச பொலிசாரின் அல்லது குறித்த வெளிநாட்டின் உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதனடிப்படையில் செயற்பட்டமையினால் தற்போது டுபாய் பாதுகாப்பு தரப்பினால் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரது கைது நேற்று முன்தினமே இடம்பெற்றது. அவரை நாட்டிற்கு கொண்டுவருவதற்கான இராஜதந்திர நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதே போன்று அர்ஜுன் மகேந்திரனும் கொண்டு வரப்படுவார். இரண்டு விடயங்களும் வெவ்வேறு என்றாலும் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டார்.

ஜீ.எஸ்.பி. வரிச் சலுகையை நீடித்தது அமெரிக்கா

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான ஜீ. எஸ். பி. வரிச் சலுகையை நீடிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை ஜீ.எஸ்.பி. வரி சலுகையை நீடிக்க அமெரிக்க ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் மீள் பரிசீலனைக்கு விண்ணப்பிக்கலாம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் மாணவர்கள் மீள்பரிசீலனைக்கு விண்ணப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி பாடசாலை மூலமான விண்ணப்பதாரிகள் ஏப்ரல் மாதம் 7ம் திகதிக்கு முன்னரும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் 12ம் திகதிக்கு முன்னரும் விண்ணப்பிக்க முடியும்.

பரீட்சை பெறுபேறுகள் சம்பந்தமாக தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டுமாயின் 0112 78 42 08 / 0112 78 45 37 / 0113 188 350 / 0113 140 314 என்ற இலக்கங்களுக்கோ அல்லது 1911 என்ற அவசர இலக்கத்திற்கோ தொடர்பு கொள்ள முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + 3 =

*