;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (30.03.2018)

0

அந்நிய செலாவணியை ஈட்டித்தருவோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை!

அபாயகரமான தொழிலில் ஈடுபட்டு அரசாங்கத்திற்கு அதிக அந்நிய செலாவணியை பெற்றுக் கொடுக்கும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அசாதாரண காலநிலை மற்றும் விபத்துக்களில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கி உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி குறித்த சூழ்நிலைகளில் கடந்த ஆண்டு உயிரிழந்த ஏழு மீனவர்களின் குடும்பத்தினருக்கு 7 மில்லியன் ரூபாய் நட்ட ஈடு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், ”உலகின் இரண்டாவது மிக ஆபத்தான தொழிலாக ஆழ்கடல் மீன்பிடி விளங்குகிறது. இவ்வாறானதொரு ஆபத்தான தொழிலில் ஈடுபடும் மீனவ சமூகத்தினரே அரசாங்கத்திற்கு அதிக அந்நிய செலாவணியை பெற்றுக் கொடுப்பவர்களாக விளங்குகின்றனர்.

இந்நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் என்ற ரீதியில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். அதன் ஒரு அங்கமாகவே மீனவர்களுக்கான புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

சிரேஷ்ட அமைச்சரின் இல்லத்தில் மைத்திரி- ரணில் மந்திராலோசனை!

நம்பிக்கையில்லா பிரேரணை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்த சிக்கல்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தீர்வு எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இல்லத்தில் நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்று மணிநேரங்களுக்கு நீடித்த குறித்த இரகசிய சந்திப்பின்போது அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து தோற்கடிப்பது என்றும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியும், பிரதமரும் அரசியல் நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவற்றிற்கு தீர்க்கமான முடிவு எட்டும் வகையில் நேற்றைய விவாதம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் வளமான எதிர்காலத்திற்கு பாகிஸ்தான் நிபந்தனையற்ற ஆதரவு!

பிரகாசமான மற்றும் வளமான எதிர்காலத்தை அடைவதற்கான இலங்கையின் முயற்சிக்கு, நிபந்தனையற்ற ஆதரவை வழங்கவுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வொன்றில் உரையாற்றிய இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஷாஹிட் அஹமட் ஹஷ்மத் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”இலங்கையும், பாகிஸ்தானும் ஒரு வலுவான உறவை கொண்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர நலன்களால் குறிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர மரியாதை இந்த உறவின் முக்கிய தூணாகும்.

இதேவேளை, பாகிஸ்தான் குடியரசு தினத்தில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துக் கொண்டமை இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவிற்கு சான்றாகும்” எனத் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − 9 =

*