;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (01.04.2018)

0

திலங்க சுமதிபால சபாநாயகரின் ஆசனத்தில் அமரக்கூடாது

நாடாளுமன்றத்தில், நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது, பிரதி சபாநாயகர், திலங்க சுமதிபால, சபாநாயகர் ஆசனத்தில் அமரக் கூடாது என ஐக்கிய தேசிய கட்சி போர்க்கொடி உயர்த்தியுள்ளது.

பிரதி சபாநாயகரின் உறவினர்களுக்கு சொந்தமான பத்திரிகையில், பிரதமருக்கு எதிரான பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாக கூறியுள்ள ஐ.தே.கவின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான லக்ஸ்மன் கிரியல்ல, பிரதமருக்கு எதிராக, பிரதி சபாநாயகர், திலங்க சுமதிபால நேரடியாகவே குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

இதனால், எதிர்வரும் 4 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கரம சிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பி​ரேரணை மீதான வாக்கெடுப்பின்போது, திலங்க சுமதிபால, சபாநாயகரின் ஆசனத்தில் அமரக்கூடாது எனவும் குறி்ப்பிட்டுள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு சதொசவின் நடமாடும் வர்த்தக நிலையங்கள்

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களை நுகர்வோருக்கு நிவாரண விலையில் பெற்றுக்கொடுப்பதற்காக சதொச நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய, நாடுபூராகவும் 400 இற்கும் அதிகமான விற்பனை நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன், பஸ் தரப்பிடங்கள், புகையிரத நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும், அடுத்த வாரம் தொடக்கம் நடமாடும் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தாண்டு காலத்தில் நுகர்வோருக்கு பற்றாக்குறையின்றி பொருட்களை பெற்றுக்கொடுப்பதே, இதன் நோக்கமென சதொச நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் சேவையில் மறுசீரமைப்பு

பொலிஸ் சேவையில் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்று சட்டம் ஒழுங்கு பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கதிர்காமம் கிரிவெஹர ரஜமகா விஹாராதிபதி றுஹூணு மஹாம்பத்துவெயின் தலைமை சங்கநாயக்கர் சங்கைக்குரிய ஒபவக்க தம்மிந்த தேரரை அமைச்சர் சந்தித்த இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக அமைச்சர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில் பொதுமக்களால் நிராகரிக்கப்படும் இவ்வாறான நடவடிக்கையின் காரணமாக நாட்டின் அபிவிருத்திக்கு அரசாங்கம் எப்பொழுதும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியமானதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கதிர்காமம் வருடாந்த உற்சவத்தை மிகவும் சிறப்பான முறையில் நடத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. உற்சவத்திற்காக ஆறு கோடி ரூபா செலவாகும் என்று தேரர் சுட்டிக்காட்டினார்.

பொதுத் தேர்தல்? பாராளுமன்றம் திரிசங்கு நிலையில்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் எந்த முடிவு எட்டப்பட்டாலும், பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமருக்கு எதிரான பிரேரணையை வெற்றிகொண்டால், நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்லவேண்டுமென மஹிந்த ஆதரவு பொது எதிரணி வலியுறுத்தி வருகின்றது. எனினும், வெற்றிபெற்றால் மட்டுமன்றி தோற்றாலும் பொதுத் தேர்தலுக்குச் செல்லும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமருக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புகள், அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் என்பனவே இதற்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமருக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியினர் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 4ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதனை வெற்றிகொள்வதற்காக ஒன்றிணைந்த எதிரணியினர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரின் ஆதரவையும் திரட்டி வருகின்றனர். மறுபக்கத்தில், இப்பிரேரணையை தோற்கடிப்பதற்கு ஐக்கிய தேசிய முன்னணி தமது பங்காளி கட்சிகளின் ஆதரவை பெறும் முனைப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + eighteen =

*