;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!! (02.04.2018)

0

நீரில் மூழ்கி ஒருவர் பலி

கண்டி, குண்டசாலை பகுதியில் மகாவலி ஆற்றில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மகாவலி ஆற்றில் நீராட சென்ற நான்கு வாலிபர்களில் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கண்டி, பகிரவகந்த பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைகள் இன்று (02) நடைபெற உள்ளதுடன் பல்லேகெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விமானப்படையினருக்கு தொழிற்பயிற்சி மற்றும் தொழிநுட்ப அறிவை வழங்க நடவடிக்கை

தியத்தலாவை இலங்கை விமானப்படை போர்ப் பயிற்சி கல்லூரியின் ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வு இன்று (02) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

தியத்தலாவை இலங்கை விமானப்படை பயிற்சிக் கல்லூரியின் அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவி நிலை அதிகாரிகள், இலங்கை விமானப்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமது சக்தி, அறிவு மற்றும் ஆக்கத்திறன்களைப் பயன்படுத்தி தாய் நாட்டுக்கு வழங்கிவரும் சேவைகளைப் பாராட்டி இதன்போது ஜனாதிபதி விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, 67 வருடகாலமாக தாய் நாட்டின் இறைமையையும் ஆட்புல எல்லையையும் பாதுகாப்பதற்கு இலங்கை விமானப்படை மேற்கொண்டுவரும் விசேட பணிகளை பாராட்டினார்.

நாட்டுக்காக உயிர் நீத்த மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி , கடந்த காலங்களில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்களின்போது இலங்கை விமானப்படையினர் மேற்கொண்ட பங்களிப்புகளைப் பாராட்டினார்.

விமானப்படை பயிற்சிக் கல்லூரியின் எதிர்கால முன்னேற்றத்திற்காகவும் இலங்கை விமானப்படை உறுப்பினர்களுக்கு தொழிற்பயிற்சி மற்றும் தொழிநுட்ப அறிவை வழங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன, பாதுகாப்பு பதவிநிலை பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமவன் ரணசிங்க, விமானப்படைத் தளபதி எயார் மார்சல் கபில ஜயம்பத்தி ஆகியோர் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

இன முறுகல்கள் ஏற்பட இது தான் காரணம்

மத நல்லிணக்கம் இன்மையே அண்மையில் எமது நாட்டில் ஏற்பட்ட தேவையற்ற இன முறுகல்களுக்கு காரணம். இதனால் யாரும் இலாபம் அடையவில்லை. ஆனால் அந்த நிகழ்வில் ஏற்பட்ட பாதிப்பிற்கு அனைவரும் பங்குதாரர்களாக மாறியிருக்கின்றோம் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கல்வி இமைச்சின் கீழ் இயங்கும் சமாதான கல்வி மற்றும் நல்லிணக்க பிரிவும் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க செயலகமும் இணைந்து எற்பாடு செய்த ஆசிரியர் மாணவர்களுக்கு இடையிலான கலாசார பரிமாற்றம் மற்றும் புரிந்துணர்வு தொடர்பான செயலமர்வு அண்மையில் ஸ்ரீ பாத கல்வியல் கல்லூரியில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மத நல்லிணக்கம் இல்லாத காரணத்தால்தான் கடந்த காலங்களில் தேவையற்ற இன முறுகல் நிலை ஏற்பட்டது.இதில் யார் இலாபம் அடைந்தார்கள் என்றால் யாருமில்லை.ஆனால் அந்த நிகழ்வில் ஏற்பட்ட பாதிப்பிற்கு அனைவரும் பங்குதாரர்களாக மாறியிருக்கின்றோம்.அதாவது நாம் அனைவரும் அந்த நட்டஈட்டை வழங்கும் பொழுது அதற்காக நாமும் ஏதோ ஒரு வகையில் அரசாங்கத்திற்கு வரி செலுத்தியிருக்கின்றோம்.எனவே இதில் யாரும் வெற்றி பெறவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே இன்றைய காலகட்டத்தில் இந்த நாட்டினுடைய பிரஜைகளையும் எதிர்கால சந்ததியினரையும் சரியாக வழிநடத்தக் கூடிய பொறுப்பு ஆசிரியப் பயிலுனர்களான உங்களிடம் இருக்கின்றது.

மனிதர்கள் மதங்களுக்குள் சிக்குண்டு தவிக்கின்றார்கள். தனது மதத்திற்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை மற்ற மதங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்பதை மறந்து செயற்படுகின்றார்கள்.மனிதனிடம் மதம் இருக்க வேண்டும் ஆனால் மனிதன் மதம் பிடித்தவனாக இருக்க கூடாது.

இன்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்ற ஆசிரிய மாணவர்கள் நாளை நீங்கள் பாடசாலைக்கு கற்பிக்க சென்றதும் தயவு செய்து மதத்தை கூறி மாணவர்களை பிரித்து விடாமல் அவர்களை அரவணைத்துக் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும்.

அடுத்த கட்டமாக பாடசாலைக்கு சென்று கல்வி கற்பிக்க தயாராக இருப்பவர்கள் நீங்கள் எனவே உங்களிடமும் இந்த சகோதரத்துவம் ஏனையவர்களின் கலாசாரம் மதம் தொடர்பான அறிவு தெளிவாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நிச்சயமாக நீங்கள் மாணவர்களுக்கு மத ஒற்றுமை தொடர்பாக கற்பிக்க முடியும். இன்று இந்த செயலமர்வில் நான்குமதத்தை சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக பங்குபற்றுவதை பார்க்கின்ற பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.இதுதான் இன்று எமது நாட்டிற்கு தேவையான ஒரு விடயமாக இருக்கின்றது. அதனை ஏற்படுத்துவதற்கு எமது நாட்டுக்காக நீங்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 17 =

*