;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (04.04.2018)

0

கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்கிறது

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்றும் தொடர்வதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

துறையுடன் தொடர்புடைய அமைச்சருடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய நேற்றைய தினம் (03) சுற்று நிரூபம் வெளியிடப்படாத நிலையில் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதாக குறித்த சங்கம் அறிவித்துள்ளது.

சம்பள உயர்வு மற்றும் கொடுப்பனவுகளை அதிகரித்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

‘கடனும் இல்லை பயமும் இல்லை’

இந்த நாட்டின் பாரிய மக்கள் ஆணையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காட்டிக்​கொடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைத் தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க போன்ற திருடர்களை ஜனாதிபதி பாதுகாத்தார். அரசியல்வாதிகள் என்ற ரீதியில் எமக்கு கடனும் இல்லை, பயமும் இல்லை.ரணில் விக்கிரமசிங்க 50 திருடர்களைப் பாதுகாத்தால், மைத்திரி 50 அல்லது 51 பேரை பாதுகாக்கின்றார். ஊழலுக்கு எதிரான மக்கள் ஆணையைப் பெற்றவர் மைத்திரிபால சிறிசேன.அவர் தான் இரண்டாவது யூதாஸ். அதேப்போல் மூன்றாவது காட்டிக்கொடுப்பை செய்தவர் மஹிந்த என்றும் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்ற கௌரவத்தை பாதுகாக்க வேண்டும்

கூட்டு எதிரணியினரால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இன்றைய விவாதத்தின்போது, நாடாளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்கும்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்துக்கொள்ள வேண்டும் என, சபாநாயக்கர் கரு ஜயசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘நிதி மோசடியில் ஈடுபட்டவரைக் கைதுசெய்ய உதவவும்’

200 மில்லியன் ரூபாய்ப் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்காக பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

புத்கமுவ, ராஜகிரிய பகுதியில் வசிக்கும் சன்ஜீவ டீ சில்வா பண்டிதசேகர என்ற சந்தேகநபர் குறித்து, தகவல் தெரிந்தவர்கள், பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர் தொடர்பில் தகவல்கள் ஏதேனும் தெரியவருமாயின், பொதுமக்கள் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் 011 2395248 என்ற தொலைபேசி இலக்கத்துக்குத் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு, பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

‘காற்றுப்போன நம்பிக்கையில்லாப் பிரேரணை ’

தன்னுடைய நாடாளுமன்ற வரலாற்றில் எத்தனை​யோ நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைப் பார்த்துள்ள நிலையில், ஆரம்பிக்கும் போதே காற்றுப்போன நம்பிக்கையில்லாப் பிரேரணையை இப்போதே பார்ப்பதாக அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணையானது, அரசாங்கத்தை இலக்காகக் கொண்டது. மஹிந்த இதில் கையெழுத்திடவில்லை. அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் 3 குழுக்கள் செய்றபடுவது தெரிகின்றது. இதில் ராஜபக்ஷக்கள் நீண்ட பயணத்தை இலக்காக கொண்டு செயற்படுகின்றமையை காணமுடிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 1 =

*