;
Athirady Tamil News

நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பான செய்தித் துணுக்குகள்..!!

0

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்களிப்பு ஆரம்பம்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்களிப்பு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலசுக வின் 12 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 12 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளனர்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தாலும் அவர்கள் தொடர்ந்தும் அமைச்சர்களாக செயல்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, சுசந்த புஞ்சி நிலமே, டப்ளியூ.டி.ஜே செனவிரத்ன, அனுர பிரியதர்ஷன யாபா, சுதர்ஷனி பிரனாந்து பிள்ளை, எஸ்.பீ திஸாநாயக்க, டிலான் பெரேரா, சந்திம வீரக்கொடி, அனுராத ஜயரத்ன மற்றும் லக்ஸ்மன் யாபா அபேவர்தன ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

முதுகெலும்புள்ளதால் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்போம் : தயாசிறி ஜயசேகர

பிரதமருக்கு எதிராக வாக்களித்த பின்னர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை கூறினால் அரசாங்கத்தில் இருந்து வெளியேற தயராக இருப்பதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் மேலும் உரையாற்றுகையில்,

கடந்த 2 ஆம் திகதி இரவு நாங்கள் அனைவரும் கூடி பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்தோம். ஆனால் சிலர் வாக்களிக்க வராது இருக்க தீர்மானித்துள்ளனர். முதுகலும்பு உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற ரீதியில் எம்மால் பிரதமருக்கு எதிராக வாக்களிக்காமல் இருக்க முடியாது.

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்கும் நோக்கம் எமக்கு கிடையாது. அமைச்சரவையில் பிரதமரும் ஒரு உறுப்பினராவார். நாங்கள் 42 பேர் ஜனாதிபதியின் அழைப்புடன் அரசாங்கத்தில் சென்றுள்ளோம். நாளைய தினமே வெளியே வர கூறினால் வரத்தயார்.

இந்த நடவடிக்கையில் நாங்கள் வேறு கட்சியை அமைக்க செல்லவில்லை. ஐக்கிய தேசிய கட்சிக்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பயண பாதையை தீர்மானிக்க முடியாது. அதேபோன்று எமக்கு அவர்களின் பாதையை தீர்மானிக்க முடியாது. இதன்படி நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக கைதூக்கி நாளை அரசாங்கத்திலிருந்து வெளியேறினாலும் பிரச்சினையில்லை. எமக்கு வாக்களித்த மக்கள் என்ன செய்தீர்கள் என கேட்கின்றார்கள். நாங்கள் வாக்குக்கேட்டே இந்த இடத்திற்கு வந்துள்ளோம்.

நாங்கள் இன்னும் சுதந்திரக் கட்சியிலேயே இருக்கின்றோம். நாங்கள் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 42 உறுப்பினர்களும் ஒன்றாக இருந்தே தீர்மானம் எடுப்போம். இதனால் நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து செயற்படுவோம். இன்று எதிராக வாக்களித்துவிட்டு நாளைய தினம் ஜனாதிபதி அரசாங்கத்திலிருந்து வெளியே செல்ல கூறினால் செல்லவும் தயார். எமக்கு முதுகெலும்பு இருப்பதனால் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்போம்.

எதிர்காலத்தில் மேலும் சில விடயங்கள் தொடர்பாக தீர்மானம் எடுக்க வேண்டும். எட்கா உடன்படிக்கை , எரிபொருள் களஞ்சியம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான பிரச்சினைகள் இருக்கின்றன. அத்துடன் மத்திய அதிவேக வீதி பிரச்சினை தொடர்பாக தீர்மானங்கள் எடுக்க வேண்டியுள்ளது.

நாங்கள் ஐக்கிய தேசிய கட்சியின் தீர்மானத்தில் இருக்க முடியாது. ஐக்கிய தேசிய கட்சிக்கு முட்டுக்கொடுக்க நாங்கள் வரவில்லை. எமக்கு பிரதமருக்கு எதிராக தனிப்பட்ட ரீதியில் எந்த பிரச்சினையும் கிடையாது. நாங்கள் கட்சி ரீதியாகவே செயற்படுவோம் என்பதுடன் ஐக்கிய தேசிய கட்சியின் தீர்மானத்திற்கமைய செயற்படப்போவதில்லை.

வாக்கெடுப்பில் இ.​தொ.கா கலந்துகொள்ளவில்லை

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, அக்கட்சியின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் முத்து சிவலிங்கம் ஆகியோர் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது கலந்துக்கொள்ளவில்லை.

ரணிலின் பதவியில் மாற்றமில்லை!

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமரின் அரசியல் இராஜதந்திரம் முழுமையாக வெளிப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்கட்சியினர் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை பயனற்றதாகவே காணப்படுகின்றது.தேசிய அரசாங்கத்தில் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் பதவி வகிப்பார் என கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.

நம்பிக்கையில்லா பிரேரணையின் முடிவுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக தேசிய அரசாங்கத்தின் கொள்கைகளையும் மீறி செயற்படுவார் என்றவிடயத்திற்கு இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சிறந்த உதாரணமாக காணப்படுகின்றது.

எவ்வித பக்கச்சார்பான விடயங்களையும் முன்னிலைப்படுத்தி பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்படவில்லை. நாட்டு மக்களின் கோரிக்கைகளுக்கு அமையவே நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டது.

பிரதமர் பதவி மோகம் கொண்டவர் அவர் மனச்சாட்சியுடன் செயற்படுபவராக இருந்தால் மத்திய வங்கியில் பிரதமர் தலைமையில் இடம் பிணைமுறி மோசடியின் பின்னர் எவ்வித அழுத்தங்களும் இன்றி பதவி விலகியிருப்பார். ஆனால் இவை யாவும் நடைமுறையில் இடம் பெறவில்லை.

பாராளுமன்றத்தில் உள்ள பெரரும்பான்மையான உறுப்பினர்கள் மக்களின் பிரதிநிதிகள் அல்ல , அவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாகவே காணப்படுகின்றனர். மக்களின் அபிலாசைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டுவருவதை தேசிய அரசாங்கம் தொடர்ந்து நிரூபித்து வருகின்றது என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 17 =

*