;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-6.!! (09.04.2018)

0

வீதி விபத்துக்களில் 476 பேர் பலி

இவ்வருடம் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில் ஏற்பட்ட விபத்துக்களில் 476 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் அதிகமான உயிரிழப்புக்கள் மோட்டார் சைக்கிள் விபத்துக்களிலேயே இடம்பெற்றுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் 180 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் விபத்துக்களில் பாதசாரிகள் 139 பேரும், பயணிகள் 70 பேரும் மற்றும் சாரதிகள் 39 பேரும் உயிரிழந்துள்ளனர்.

பாரிய செயற்றிட்டங்கள் தொடர்பில் இலங்கை, சீனா பேச்சு

இலங்கை, சீனாவுக்கு இடையில் மிகப்பெரிய செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பேச்சுகள் முன்னெடுக்கப்படுவதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இயற்கை எரிசக்தி நிலையத்தை அமைத்தல், மசகு எண்ணெய் சுத்திகரிப்பு, சீமெந்து, உருக்கு மற்றும் இரும்பு உற்பத்தி ஆகிய துறைகளில் முதலீடுகளை மேறகொள்வது தொடர்பில் இந்த பேச்சுகளில் அவதானம் செலுத்தியுள்ளதாக, சீனத் தூதுவர் செங் சியுவான் தெரிவித்துள்ளார்.

இந்த செயற்றிட்டங்கள் ஊடாக உள்நாட்டு பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியுமெனவும், மக்களின் வாழ்க்கைத்ததரம் மற்றும் நாட்டின் அபிவிருத்தியிலும் பாரிய முன்னேற்றங்களை காணமுடியுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த மூன்று தசாப்தங்களாக நாட்டில இடம்பெற்ற யுத்தம் தேசத்தின் பொருளதாரம் மற்றும் சமூக அபிவிருத்தி ஆகியவற்றை பல வகையிலும் பாதித்ததாக சீன தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா ஏற்கனவே இலங்கையின், துறைமுகம், அதிவேக நெடுஞ்சாலை, விமானநிலையம், நிலக்கரி மின்னுற்பத்தி உள்ளிட்ட பல செயற்றிட்டங்களில் தமது பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும், சீன நிறுவனங்கள் சுமார் 15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உட்கட்டுமான செயற்றிட்டங்களை இலங்கையில் நிறைவு செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

’படைவீரர்களுக்கு அரசாங்கம் அனைத்து வசதிகளையும் வழங்கும்’

தாய் நாட்டுக்காக தமது கடமைகளை நிறைவேற்றும் படைவீரர்களுக்கு அரசாங்கம் அனைத்து வசதிகளையும் வழங்குமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மாதுரு ஓய இராணுவ பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெற்று வெளியேறும் நிகழ்வு, இன்று, முப்படைகளின் தளபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, “பாதுகாப்புப்படை தமது சேவைகளை நிறைவேற்றும் போது ஆயுதங்களினால் மட்டுமன்றி அறிவு, இயலுமை, ஆக்கத்திறன் என்பவற்றினாலும் பலம்பெற்று அவர்களது திறமைகளை வெளிக்காட்ட வேண்டும். இதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” எனக் குறிப்பிட்டார்.

மாதுரு ஓய இராணுவ பயிற்சிப் பாடசாலையின் 48ஆவது ஆரம்ப பயிற்சிப் பாடநெறியை பயின்ற ஏழு அதிகாரிகளும் ஏனைய பதவி நிலைகளைச் சேர்ந்த 189 பேரும் பயிற்சிகளை நிறைவுசெய்து வெளியேறினர்.

பேண்ட் வாத்தியம், பரசூட் கண்காட்சிகள் என்பனவற்றுடன் மிகச் சிறப்பாக இடம்பெற்ற இந் நிகழ்வில் சிறந்த மாணவர்மற்றும் திறமையான உடற்பயிற்சி மாணவராக இரண்டாவது லெப்டினன் டபிள்யுயூஎம் கே ஆர்வணிகசூரிய மற்றும் சிறந்த குறிபார்த்துச் சுடும் வீரராக லெப்டினன் ஈ.எம்.பி.டி ஏக்கநாயக்க ஆகியோர் ஜனாதிபதியிடமிருந்து விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

ஜனாதிபதியின் வருகையை நினைவுகூறும் முகமாக மாதுருஓய இராணுவ பயிற்சிப் பாடசாலை வளாகத்தில் ஜனாதிபதி நாக மரக்கன்று ஒன்றை நாட்டியதுடன், அங்குள்ள மூலிகைப் பூங்காவையும் பார்வையிட்டார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்ன, பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, மாதுருஓய இராணுவ பயிற்சிப் பாடசாலையின் கட்டளைத் தளபதி கேர்ணல் எம்.ரி.யு மகலேக்கம் ஆகியோர் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரதானிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவை

தமிழ் சிங்கள புதுவருட பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில், விசேட ரயில் சேவைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

நாளை முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை 8 நாட்களுக்கு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 5 =

*