;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (10.04.2018)

0

முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்துவது இம்மாத இறுதி முதல் நடைமுறைக்கு

முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது இம்மாத இறுதியில் இருந்து கட்டாய அமுலுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபை கூறியுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பு மற்றும் முச்சக்கர வண்டி ​சேவையின் தரத்தை மேம்படுத்தல் போன்ற நோக்கங்களுக்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த சபையின் தலைவர் சிசிர கோதாகொட கூறினார்.

கட்டண மீட்டர் கடந்த 01ம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டிருந்த போதிலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற் கொண்டு மேலும் இரண்டு வார காலம் வழங்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

எவ்வாறாயினும் அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தமது சங்கம் எதிர்ப்பு தெரிவிப்பதாக முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன கூறினார்.

வாகன சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான எழுத்து மூல பரீட்சையில் மாற்றம்

வாகன சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான எழுத்து மூலப் பரீட்சையை எதிர்வரும் மே மாதம் 01ம் திகதி முதல் புதிய முறையில் நடத்துவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

எழுத்து மூலப் பரீட்சையில் இடம்பெறுகின்ற மோசடிகளை தடுத்தல் மற்றும் விரைவாக பெறுபேறுகளை வௌியிடுவது போன்ற காரணங்களுக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி கூறினார்.

அதன்படி முதலில் வெஹரஹர காரியாலயத்தில் புதிய முறையில் எழுத்து மூலப் பரீட்சையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தின் கடந்த காலப்பகுதியில் வாகனங்களை பதிவு செய்வது அதிகரித்திருப்பதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி கூறினார்.

பொய்க் குற்றம் சுமத்தி இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது

இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவர் இலஞ்ச மற்றும் ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

10,000 ருபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொள்ளும் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச மற்றும் ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழு கூறியுள்ளது.

பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்த போது, சட்டத்துக்கு மாறான செயல் ஒன்றை புரிவதற்காக வந்திருப்பதாக குற்றம் சுமத்தி சட்ட நடவடிக்கை எடுக்காதிருக்க குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அந்த நபரிடம் 20,000 ரூபா இலஞ்சமாக கேட்டுள்ளார்.

பின்னர் அந்த தொகையை 10,000 ரூபாவாக குறைத்துள்ளதுடன், பணத்தை வழங்கும் வரையில் பாதிக்கப்பட்ட நபரின் அடையாள அட்டை மற்றும் தொலைபேசியை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைப்பற்றியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அந்த நபரிடம் இலஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் அடையாள அட்டை மற்றும் தொலைபேசியை திரும்ப வழங்கும் போது கோட்டை புகையிரத நிலையத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

சர்வதேச சட்டங்களை மதிக்குமாறு ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோரிக்கை

சர்வதேச சட்டங்களை மதித்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஸ்ரீலங்காவின் முப்படைகளின் தளபதிகள் உட்பட உயர் நிலை படை அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றிய ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தியிருக்கின்றார்.

ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையணிக்காக படையினரை அனுப்பி வைக்கும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையை ஸ்ரீலங்கா இராணுவம் மீறியுள்ளதாக ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றம்சாட்டியிருந்த நிலையிலேயே ஸ்ரீலங்கா அரச தலைவர் இராணுவத்தினர் மத்தியில் ஆற்றிய உரையின் போது இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கின்றார்.

ஸ்ரீலங்கா இராணுவத்தின் மாதுரு ஓய விசேட அதிரடிப்படை இராணுவ பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெற்றவர்களின் வெளியேறும் நிகழ்வு நேற்று முற்பகல் முப்படைகளின் தளபதியான ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

மாதுரு ஓய இராணுவ பயிற்சிப் பாடசாலையின் 48 ஆவது ஆரம்ப பயிற்சிப் பாடநெறியை பயின்ற ஏழு அதிகாரிகளும் ஏனைய பதவி நிலைகளைச் சேர்ந்த 189 பேரும் பயிற்சிகளை நிறைவுசெய்து நேற்றைய தினம் வெளியேறினர்.

பேண்ட் வாத்தியத்துடன் பயிற்சிகளை முடித்துக்கொண்ட விசேட அதிரடிப்படையினரின் அணிவகுப்பும் அதேவேளை பரசூட் கண்காட்சியும் இடம்பெற்றது.

இதனையடுத்து விசேட அதிரடிப்படை பயிற்சிகைள மிகச் சிறப்பாக முடித்துக்கொண்ட படையினருக்கு விருது வழங்கி வைத்த ஸ்ரீலங்கா ஜனாதிபதி அங்கு கூடியிருந்த படையினர் மத்தியில் உரையாற்றுகையில் சர்வதேச சட்டங்களை மதித்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

“ இராணுவத்திற்கு இருக்க வேண்டிய அடிப்படையான காரணிகளான ஒழுக்கம், தைரியம், அர்ப்பணிப்பு, உண்மை மற்றும் நேர்மை ஆகியன மிகவும் முக்கியமானவை. நீங்கள் இந்த இடத்தில் செய்துகொண்ட சத்தியப்பிரமாணத்தை நான் உன்னிப்பாக கவனித்தேன். இந்த சத்தியப்பிரமாணத்தில் இந்த அனைத்து விடையங்களும் உள்ளடங்கியிருந்தன. நாம் தேசிய ரீதியிலும் அதேபோல் சர்வதேச ரீதியிலும் மதிக்கப்படுபவர்களாகவும் ஏற்றுக்கொள்ளப்படுபவர்களாகவும் இருக்க வேண்டும் என்றால் இராணுவத்திற்குரிய இந்த அடிப்படையக் காரணிகளை முழுமையாக கடைபிடிப்பவர்களாக நாம் இருக்க வேண்டும்.

எமது இராணுவம் ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச ரீதியில் அங்கரிக்கப்பட்ட இராணுவமாக மாறியிருக்கின்றது. அதனால்தான் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையணிக்காக எமது படையினரை அனுப்புவதற்கான அனுமதி ஸ்ரீலங்கா அரசுக்கு கிடைத்திருக்கின்றது. அதனால் நாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒழுக்கத்தை முழுமையாக கடைபிடிப்பவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.)

லெபனானில் பணியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையணியுடன் இணைந்துகொள்வதற்காக ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் இறுதியாக அனுப்பி வைக்கப்பட்ட 49 பேரைக் கொண்ட இராணுவப் படையணியை ஐக்கிய நாடுகள் சபையுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாட்டிற்கு அமைய முன்கூட்டிய ஆய்வுக்கு உட்படுத்தவில்லை என ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு இராணுவம் மீது கடந்தவாரம் குற்றம்சாட்டியிருந்தது.

இந்த நடவடிக்கை மூலம் ஸ்ரீலங்கா இராணுவத் சர்வதேசத்துடனான உடன்படிக்கையை அப்பட்டமாக மீறியுள்ளதாகவும் ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரான கலாநிதி தீபிக்கா உடுகம ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்திருந்த கடிதத்தில் குறிப்பிட்டு கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு ஒருவாரம் பூர்த்தியாகாத நிலையில் இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றும் போதே ஸ்ரீலங்கா ஜனாதிபதி சர்வதேச சட்டங்களை மதித்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கின்றார்.

இதேவேளை நிகழ்வின் இறுதியில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி தனது விஜயத்தை நினைவுகூறும் முகமாக மாதுருஓய விசேட அதிரடிப்படை இராணுவ பயிற்சிப் பாடசாலை வளாகத்தில் நாக மரக்கன்று ஒன்றையும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி நாட்டிவைத்ததுடன், அங்கு அமைந்துள்ள மூலிகைப் பூங்காவையும் பார்வையிட்டார்.

இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்ன, பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, மாதுருஓய இராணுவ பயிற்சிப் பாடசாலையின் கட்டளைத் தளபதி கேர்ணல் எம்.ரி.யு. மகலேக்கம் ஆகியோர் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரிகள் கலந்துகெண்டிருந்தனர்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து மாதுரு ஓய மீனவர் கிராமத்திலுள்ள கத்தோலிக்க தேவாலயத்தின் புதிய கட்டிடத்தை திறந்துவைக்கும் நிகழ்விலும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி கலந்துகொண்டார்.

‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வணக்கத் தளங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், மாதுரு ஓய மீனவர் கிராமத்திலுள்ள கத்தோலிக்க தேவாலயத்திற்கான புதிய கட்டடம், சுமார் 60 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மீனவர் கிராமத்திலுள்ள மக்களின் வீட்டுப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஸ்ரீலங்கா ஜனாதிபதி கேட்டறிந்துகொண்டார். இதனையடுத்து மாதுருஓயா மீனவர் கிராம மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதாகவும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி உறுதியளித்தார்.

அதேவேளை குறித்த பிரதேசத்திலுள்ள பிள்ளைகளின் கல்வி சுகாதாரப் பிரச்சினை உள்ளிட்ட ஏனைய தேவைகளையும் கண்டறிந்து நிறைவேற்றிக் கொடுக்குமாறு ஸ்ரீலங்கா ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

இந்த நிகழ்வில் பிரதேசத்தின் மதத் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

மன்னார் முருங்கன், அலவக்கையில் ஒரு நாள் இலவச மருத்துவ முகாம்

மன்னார் முருங்கன், அலவக்கை பகுதியில் நேற்றையதினம் ஒரு நாள் இலவச மருத்துவ முகாம் இடம்பெற்று மூக்குக்கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கிராம அபிவிருத்திச்சங்க மண்டபத்தில் முருங்கன் பொலிஸ் நிலைப் பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாமில் 115பேருக்கு மூக்குக்கண்ணாடிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

வவுனியா இறம்பைக்குளம் ஈஷி மிஷன் பூரண சுவிஷேச சபையின் பிரதான பிஷப் பி. எம். இராஜசிங்கத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந்த மருத்துவ முகாமின் ஊடாக இப்பகுதி மக்களின் நீண்ட காலத் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 11 =

*