;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.!! (10.04.2018)

0

மாதுறு ஓயா நீர்த்தேக்க அபிவிருத்தி பகுதிக்கு ஜனாதிபதி விஜயம்

மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளைக் கண்டறியும் பொருட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனைப் பார்வையிட்டார்.

மாதுரு ஓயா இராணுவ பயிற்சிப் பாடசாலையில் பயிற்சியை நிறைவுசெய்து வெளியேறும் நிகழ்வில் பிரதம அதிதியாக நேற்று கலந்துகொண்டதன் பின்னர் ஜனாதிபதி இப்பகுதிக்கு விஜயம் செய்தார்.

ஆலயங்களை சமூக சேவைகளை செய்கின்ற இடமாக மாற்றுங்கள்

கோயில்களைக் கட்டுவதில் காட்டுகின்ற அக்கறையை விட எமது சமயத்தினை வளர்ப்பதில் காட்டுகிற அக்கறை குறைவாகவுள்ளது.

ஆலயத்தை நல்ல ஆன்மீகக் கூடமாக , உங்களால் முடிந்தளவுக்கு சமூக சேவை செய்கின்ற இடமாக மாற்ற வேண்டும் என்று மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

இந்து கலாச்சார திணைக்களம் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்து ஆலயங்களை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் 73 இந்து ஆலயங்களுக்கு 11 மில்லியன் ரூபாவை வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாச்சார நிலையத்தில் இடம்பெற்றது.

சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எந்திரி பி.சுரேஸ் தலைமையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில், அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய சீ.யோகேஸ்வரன் குறிப்பிடுகையில்,

ஆலயம் சிறிதாக இருந்தாலும் ஆலய தர்மகர்த்தாக்களின் ஆன்மீகம் பெரிதாக இருத்தல் வேண்டும். கோயில்களைக் கட்டுவதில் காட்டுகின்ற அக்கறையை விட எமது சமயத்தினை வளர்ப்பதில் காட்டுகிற அக்கறை குறைவாக இருக்கிறது. ஊருக்கு ஆலயம்தான் மிக முக்கியமானது, அதன் தர்மகர்த்தா தான் ஊரின் தலைவன்.

அந்தச் சமயத்தினை மட்டுமல்ல மக்களையும் சமுதாயத்தையும் வழிப்படுத்த வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. ஆகவே ஆலய தர்மகர்த்தாக்களை கவனத்தில் எடுத்தல் வேண்டும்.

கிடைக்கின்ற நிதி குறைவாக இருந்தாலும் இயன்றளவுக்கு பக்தியை பெருக்குங்கள். எங்களது சமயத்தைக் கூட பிழையாகக் கூறி மத மாற்றம் செய்யாதளவுக்கு நீங்கள் பாதுகாக்க வேண்டும்.

ஆகவே உங்களது கடமை ஆலயத்தின் ஆன்மீகத்தைக் காப்பது. ஆலயத்தை நல்ல ஆன்மீகக் கூடமாக மாற்றுங்கள். உங்களால் முடிந்தளவுக்கு சமூக சேவை செய்கின்ற நல்ல விடயங்களைக் கையாளுகின்ற இடமாக ஆலயங்களை மாற்ற வேண்டும்.

ஆலயங்களுக்கு பரிபாலன சபை என்பதனை மாற்றி தர்மகர்த்தா என்ற பெயரைக் கொண்டு வரவேண்டும். பரிபாலன சபையினர் கும்பாபிசேகம் செய்வது ஏனைய கிரித்தியங்களைச் செய்வதுடனே நிறுத்தி விடுகிறார்கள்.

தர்மகர்த்தா என்பதும் மத விடயங்களை விடவும் ஆன்மீகம் சார்ந்தும் சமூக விடயங்கள் சார்ந்தும் கிராமங்கள் சார்ந்தும் பெரியளவுகளில் செயற்படுபவராகவும் வழிநடத்துவர்களாகவும் இருப்பார்கள் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார், அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் கே.விமலநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான சீ. யோகேஸ்வரன், எஸ். சிறிநேசன், எஸ் வியாழேந்திரன், கே. கோடீஸ்வரன், இந்து திணைக்கள பணிப்பாளர் உமாமகேஸ்வரன், புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர் என்.அன்னலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆலய தலைவர்களிடம் நிதிக்கான காசோலைகளைக் கையளித்தனர்.

கதிர்காமம் தேவாலயத்தின் பஸ்னாயக்க நிலமே பதவி நீக்கம்

வரலாற்றுச் சிறப்புமிக்க றுகுணு கதிர்காமம் தேவாலயத்தின் பஸ்னாயக்க நிலமே டீ.பி.குமாரகே நிலமே பதவியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மூன்று மாத காலத்துக்கு அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ம பெரேரா கூறினார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள் இன்றி நடந்த அமைச்சரவை கூட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று காலை இடம்பெற்றது.

இன்று காலை 09.30 மணிக்கு ஆரம்பமான அமைச்சரவை கூட்டத்தை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் புறக்கணித்திருந்த நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சர்கள் மாத்திரம் கலந்து கொண்டிருந்தனர்.

சுமார் ஒன்றரை மணி நேரம் அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தை புறக்கணிப்பதற்கு நேற்று இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதன்படி எந்தவொரு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா ஊடகங்களிடம் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 1 =

*