;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-5.!! (11.04.2018)

0

பாதிக்கப்பட்ட விவசாய சமூகத்திற்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்பு…!

புத்தளம் மாவட்டத்தில் இடம்பெறும் கடுமையான வரட்சி காரணமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாமல் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாய சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்காக 600 ஏக்கர் சோளப் பயிர்ச்செய்கைத் திட்டமொன்றை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் இரண்டு போகங்கள் எத்தகைய பயிர்ச்செய்கை நடவடிக்கைகளிலும் ஈடுபடமுடியாத பிரதேசங்களைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இங்கினிமிட்டிய திட்டத்திலுள்ள மிகவும் குறைந்த அளவில் உள்ள நீரைப் பயன்படுத்தி இந்த விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்கு மேலதிக பயிர்ச்செய்கைக்காக விவசாய சமூகத்திற்கு நிவாரணம் வழங்க மேலதிகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சூரிய சக்தியினால் நீர் பம்பிகளை இயக்கி நீரைப் பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சித்திட்டம், களை எடுக்கும் இயந்திரங்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்ச்சித்திட்டம், இளம் விவசாய தொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் ஆகியனவும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஏற்பாடுகளை வினைத்திறன்மிக்க வகையில் பயன்படுத்தி விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்கும் வகையில் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

6 அமைச்சர்கள் குறித்து மஹிந்தவின் எதிர்வுகூறல்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுஎதிரணியுடன் இணையவுள்ளனர் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆறு அமைச்சர்கள் உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வின்போது எதிரணியுடன் இணைந்துகொள்வார்கள் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

19 ஆம் திகதி அவர்கள் தங்கள் பதவிகளை துறந்துவிட்டு பொதுஎதிரணியுடன் இணைந்துகொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களை தொடர்ந்தும் அரசாங்கத்தில் தக்கவைத்துக்கொள்வதற்கான தீவிர முயற்சிகள் இடம்பெறுகின்றன எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

​கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

கேரளா கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (11) கடுவல பாலத்துக்கு அருகில் வைத்து, குறித்த சந்தேகநபர்கள் இருவரும், 51 கிலோகிராம் பெறுமதியான கேரளா கஞ்சாவை வைத்திருந்தமைக்காக ​பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு – மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

’இடியுடன் கூடிய மழை தொடரும்’

நாட்டின் பலப் பகுதிகளிலும், இன்று மாலை முதல் நள்ளிரவு வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

குறிப்பாக, மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென திணைக்களம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மழை பெய்யும் வேளையில், கடும் வீசக்கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை தொடருமெனவும், பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − four =

*