;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-6.!! (11.04.2018)

0

பொருட் கொள்வனவில் வாடிக்கையாளர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

பொருட் கொள்வனவில் வாடிக்கையாளர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் பிரதிப் பணிப்பாளர் திருமதி சமந்தா கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

குறிப்பாக குறைந்த விலையிலான துணி வகைகள், மின்சார உபகரணங்கள் போன்றவற்றை கொள்வனவு செய்கையிலும், விசேட விலைக் கழிவுகளை பெறுகையிலும் அவதானம் தேவை என அவர் குறிப்பிட்டார்.

மோசடிகள் பற்றி 0117 755 481 என்ற தொலைபேசி வாயிலாக அறிவிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அமைச்சர்களுக்கு பதவி விலக ஜனாதிபதி அனுமதி

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்களுக்கும் பதவி விலகுவதற்கான அனுமதியை ஜனாதிபதி வழங்கியுள்ளதாக அமைச்சர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்கள் தொடர்ந்தும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் கடமையாற்ற உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட விவசாய சமூகத்திற்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்பு…!

புத்தளம் மாவட்டத்தில் இடம்பெறும் கடுமையான வரட்சி காரணமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாமல் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாய சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்காக 600 ஏக்கர் சோளப் பயிர்ச்செய்கைத் திட்டமொன்றை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் இரண்டு போகங்கள் எத்தகைய பயிர்ச்செய்கை நடவடிக்கைகளிலும் ஈடுபடமுடியாத பிரதேசங்களைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இங்கினிமிட்டிய திட்டத்திலுள்ள மிகவும் குறைந்த அளவில் உள்ள நீரைப் பயன்படுத்தி இந்த விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்கு மேலதிக பயிர்ச்செய்கைக்காக விவசாய சமூகத்திற்கு நிவாரணம் வழங்க மேலதிகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சூரிய சக்தியினால் நீர் பம்பிகளை இயக்கி நீரைப் பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சித்திட்டம், களை எடுக்கும் இயந்திரங்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்ச்சித்திட்டம், இளம் விவசாய தொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் ஆகியனவும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஏற்பாடுகளை வினைத்திறன்மிக்க வகையில் பயன்படுத்தி விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்கும் வகையில் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × one =

*