;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.!! (15.04.2018)

0

உடவளவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

உடவளவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று (15) காலை 10 மணியளவில் திறக்கப்படவுள்ளது.

நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ள காரணத்தினால் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதாக மகாவலி அதிகாரசபையின் சேவைகளுக்கு பொறுப்பான பொறியியலாளர் சசுஜீவ குணசேகர தெரிவித்துள்ளார்.

உடவளவ நீர்தேக்கத்தின் 5 வான் கதவுகள் 6 அடி அளவில் திறக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என மகாவலி அதிகாரசபை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இன்றும் இடியுடன் கூடிய மழை

நாட்டில் பல பிரதேசங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. குறிப்பாக மேல், வடமேல், சப்ரகமுவ, தென், மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் ஏறத்தாழ 100மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சியும் எதிர்பார்க்கப்படுகின்றது

அத்துடன் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சூரியனின் வடக்கு நோக்கிய தொடர்பான இயக்கம் காரணமாக இவ்வருடம் ஏப்ரல் 05 முதல் 15 வரை சூரியன் இலங்கையின் அகலாங்குகளுக்கு மேலாக உச்சம் கொடுக்க உள்ளது. இன்று (15) நண்பகல் 12.10 அளவில், வட்டுக்கோட்டை, சுன்னாகம் மற்றும் அந்தணன்திடல் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சத்தில் காணப்படும்.

கடற்தொழில் ஊழியர்களின் சம்பள கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை : மஹிந்த அமரவீர

கடற்றொழில் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய சம்பள கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் கடற்றொழில் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய சம்பள மிகுதியும், அனைத்துக் கொடுப்பனவுகளையும் செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இவற்றைச் செலுத்துவதற்காக 168 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் முதல் கடற்றொழில் கூட்டுத்தாபனம் இலாபம் ஈட்டும் நிறுவனமாக உயர்ந்திருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + 2 =

*