பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (18.04.2018)

பிபிலை நாகல வாவியில் குளிக்கச் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
நண்பர்களுடன் வாவிக்கு குளிக்கச் சென்ற இளைஞன் நீரோட்டம் அதிகம் காணப்படுகின்ற பகுதியில் குளித்தமையால் நீரில் இழுத்து செல்லப்பட்டார் எனக் கூறப்பட்டது.
காலி ஹிமதுவ பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார்.
பொதுமக்களின் உதவியுடன் இருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.
வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
கெப்பிட்டிபொல சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 16 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து நேற்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு வேன்கள் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டது எனக் கூறப்பட்டது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.
இலங்கைக்கு மீண்டும் ஜி.எஸ்.பி வரிச் சலுகை
இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்க அரசினால் வழங்கப்படுகின்ற, ஜி.எஸ்.பி வரிச் சலுகை இம்மாதம் 22ஆம் திகதி முதல் மீண்டும் கிடைக்கவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இலங்கை உள்ளிட்ட 120 நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் 5,000 வகையான பொருட்களுக்கு, ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை 2020ஆம் ஆண்டு இறுதிவரை நீடிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் கையொப்பமிட்டிருந்தார்.
இதற்கமைய இலங்கையின் ஏற்றுமதியாளர்களுக்கு அதன் நன்மையை பெற்றுக்கொள்ள முடியுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவிற்கான ஏற்றுமதி என்றும் இல்லாதவாறு கடந்த வருடம் மூன்று பில்லியன் டொலர்களை எட்டியுள்ளதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இது 2016ஆம் ஆண்டைவிட 3.65 வீத அதிகரிப்பாகும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.பி வரிச்சலுகை 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் காலாவதியான நிலையில் மீண்டும் அதற்கான அங்கீகாரத்தை அங்கீகாரத்தை அமெரிக்க காங்கிரஸ் வழங்கியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர் பவானிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு மீண்டும் கல்வியமைச்சர் பதவி வழங்கப்பட்டமைக்கு எதிராக எதிர்வரும் 23 ஆம் திகதிக்குப் பின்னர் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (18) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் அதனை தெரிவித்திருந்தார்.
கடந்த ஜனவரி மாதம் பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஆர்.பவானியை முழந்தாலிட வைத்த சம்பவம் தொடர்பில், ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவுக்கு பதவி பறிக்கப்பட்டு, மீண்டும் வழங்கப்பட்டமை தொடர்பிலேயே அந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.