;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.!! (18.04.2018)

0

பதுளை, மொனராகலை வைத்தியசாலைகளில் பணிப்பகிஷ்கரிப்பு

பதுளை மற்றும் மொனராகலை பொது வைத்தியசாலைகளில் நாளைய தினம் ஒருநாள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக, கதிர்வீச்சு விஞ்ஞான தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஊவா மாகாணத்தில் கடந்த 15 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதமச் செயலாளர் தர்மகீர்த்தி ஏபா தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாணத்தில் இடம்பெறும் தேவையற்ற இடமாற்றங்களை நிறுத்தக் கோரியும், வெலிமடை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் கதிர்வீச்சு விஞ்ஞான தொழில்நுட்பவியலாளர்களுக்கு நிலுவையில் உள்ள மேலதி நேர கொடுப்பனவை வழங்கக் கோரியும், வலியுறுத்தி அரச கதிர்வீச்சு விஞ்ஞான தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பணிப்புறக்கணிப்புக் காரணமாக ஊவாக மாகாணத்தின் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும், எக்ஸ்ரே உள்ளிட்ட எவ்வித கதிர்வீச்சுடன் தொடர்புடைய பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் பிரச்சினைத் தொடர்பில் உரியத் தீர்வு வழங்காவிடின், நாளைய தினம் முதல் நாடளாவிய ரீதியில் பாரிய வேலை நிறுத்தப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக கதிர்வீச்சு விஞ்ஞான தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

’ஜனாதிபதி நாடு திரும்பியதும் புதிய நிகழ்ச்சித் திட்டங்கள்’

சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தைப் பலப்படுத்தி புதிய வேலைத்திட்டத்தின் ஊடாக நாட்டை முன்னோக்கிக் கொண்டுச்செல்ல எதிர்ப்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் “இந்த நாட்டின் சமாதானம், நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை பலப்படுத்த வேண்டும். அதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். எமது அரசாங்கத்தால் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு வேலைத்திட்டங்களின் பிரதிபலன்களை அனுபவிப்பதற்கான காலம் கனிந்துள்ளது. அதேபோல் கடந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களை நிறைவு செய்வதற்கும், புதிதாக வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கும் ஏற்கனவே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பிரித்தானிய விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியதும் புதிய நிகழ்ச்சித் திட்டங்கள் பலவற்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு உள்ளிட்ட சில இயற்கை அழிகவுகளை கடந்த வருடம் இந்த நாடு எதிர்கொண்டது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

35 வருடங்களின் பின்னர் நாடாளுமன்றம் புனரமைப்பு

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியானது 35 வருடங்களக்குப் பின்னர் 1 பில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு செலவாகும் பணத்தை கோரும் அமைச்சரவை பத்திரமானது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற பொதுசெயலாளர் தம்மிக திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் கூ​ரை, வாயிற் கதவுகள், மலசல கூடம்,நாடாளுமன்ற சபை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்கள் என்பன புனரமைப்பு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு மீண்டும் ஜி.எஸ்.பி வரிச் சலுகை

இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்க அரசால் வழங்கப்படுகின்ற, ஜி.எஸ்.பி வரிச் சலுகை இம்மாதம் 22ஆம் திகதி முதல் மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இலங்கை உள்ளிட்ட 120 நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் 5,000 வகையான பொருட்களுக்கு, ஜி.எஸ்.பி வரிச் சலுகையை 2020ஆம் ஆண்டு இறுதிவரை நீடிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் கையொப்பமிட்டிருந்தார்.

இதற்கமைய இலங்கையின் ஏற்றுமதியாளர்களுக்கு அதன் நன்மையை பெற்றுக்கொள்ள முடியுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கான ஏற்றுமதி என்றும் இல்லாதவாறு கடந்த வருடம் மூன்று பில்லியன் டொலர்களை எட்டியுள்ளதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இது 2016ஆம் ஆண்டைவிட 3.65 வீத அதிகரிப்பாகும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.பி வரிச்சலுகை 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் காலாவதியான நிலையில் மீண்டும் அதற்கான அங்கிகாரத்தை அமெரிக்க காங்கிரஸ் வழங்கியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமல் கருணாசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில்

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர், மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இது தொடர்பிலான வழக்கு கல்கிஸ்ஸ மேலதிக நீதவான் முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போதே அவரை எதிர்வரும் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

நூலகத்தில் தீ விபத்து

காரைதீவு, மாளிகைக்காடு உப நூல் நிலையத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.

நூலகத்தில் இருந்த பத்திரிகைகளும் எரியூட்டப்பட்டிருந்துடன் அலுமாரியொன்றின் கண்ணாடியும் சேதமாகியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் நேரடியாகச் சென்று பார்வையிட்டு உரிய நூலகரிடம் வாக்கு மூலத்தைப் பெற்றுக்கொண்டார்.

சம்பவம் தொடா்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 1 =

*