;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-5.!! (18.04.2018)

0

உடனடியாக அரசாங்கத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரை காத்திருக்காது உடனடியாக அரசாங்கத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை இரத்துச் செய்ய வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வரும் திருத்தச் சட்டம் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அடுத்த பொதுத் தேர்தல் வரை தற்போதைய அரசாங்கம் ஆட்சியில் இருப்பது கூட்டு எதிர்க்கட்சிக்கு சாதகமாக அமையும் என சிலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

எனினும் அதுவரை காத்திருக்காது மக்களுக்காக தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும்.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன கொண்டு வரும் யோசனைகள் குறித்து கவனமாக செயற்பட வேண்டும் எனவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இலங்கையை வந்தடைந்த அலி லரிஜானி

இலங்கைக்கான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொள்ள ஈரானிய பாராளுமன்ற சபாநாயகர் அலி லரிஜானி இன்று (18) விஷேட விமானம் ஒன்றில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

ஈரான் சபாநாயகர் உள்ளிட்ட 36 பேர் அடங்கிய குழு ஒன்றே இவ்வாறு வருகை தந்துள்ளனர்.

வியட்நாமிற்கான விஜயத்தை முடித்துவிட்டு இன்று இரவு 7.10 மணியளவில் ஈரானின் விஷேட விமானம் ஒன்றில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர்க​ளை வரவேற்பதற்காக அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.

இந்த குழு 20 ஆம் திகதி வரையில் இலங்கையில் இருக்க உள்ளதுடன் இரு நாடுகளுக்குமிடையிலான பாராளுமன்ற தொடர்புகள் உள்ளிட்ட ஏனைய துறைசார் தொடர்புகளை அபிவிருத்தி செய்து கொள்வது தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படவும் உள்ளது.

பௌத்தகுருமாருக்கு வாக்குறுதி வழங்கி பிரதமர்

இலங்கை நல்லிணக்கம், சமாதானத்தை பலப்படுத்தும் புதிய நிகழ்ச்சிநிரலுடன் முன்னோக்கி செல்லும் என பிரதமர் ரணில்விக்கிரமசிங்க கண்டியில் பௌத்தமதகுருமாரிற்கு வாக்குறுதி வழங்கியுள்ளார்.

கண்டியில் இன்று பௌத்தபீடாதிபதிகளை சந்தித்து நாட்டின் தற்போதைய அரசியல் நிலை குறித்து பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் எதிர்கால திட்டம் குறித்து பௌத்தமத தலைவர்களுடன் ஆராய்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அறிமுகப்படுத்திய பல திட்டங்கள் மூலம் நன்மையை பெறுவதற்கான தருணம் இதுவென தெரிவித்துள்ள பிரதமர் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள பல திட்டங்களை பூர்த்திசெய்ய உள்ளதாகவும் புதிய திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும் நாட்டிற்கான புதிய திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் நாடு எதிர்நோக்கியுள்ள பல இயற்கை அனர்த்தங்களை சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்த வருடம் இயற்கை அனர்த்தங்களை சந்திக்காது என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இடியுடன் கூடிய மழை தொடரும்

தற்பொழுது நிலவும் மழையுடன் கூடிய வானிலை எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்கு நீடிக்குமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 1.30 மணிமுதல் அடுத்து வரும் 12 மணித்தியாலங்களுக்கு அந்த நிலையம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியை எதிர்ப்பார்க்க முடியுமென அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது இந்த பகுதிகளில் தற்காலிகமாக கடும்காற்று வீசக்கூடுமெனவும், இடி, மின்னல் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

மணித்தியாலத்துக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும் அந்த தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் தொடக்கம் கொழும்பு மற்றும் கொழும்பு தொடக்கம் பொத்துவில் வரையான கடற்கரைப் பிரதேசங்களில் காற்று வீசக்கூடுமெனவும், இந்த சந்தர்ப்பத்தில் கடலுக்குச் செல்வதை மீனவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × five =

*