பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (19.04.2018)

ஈரான் சபாநாயகர் குழு – இலங்கை வந்தடைந்தது!!
ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் அலி லாறிஜனி உட்பட 36 பேரடங்கிய குழுவினர் நேற்றிரவு கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை வந்தடைந்தனர்.
இந்தக் குழுவினர் 3 நாள்கள் இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு தரப்பினருடன் பேச்சுக்கில் ஈடுபடுவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் குழு வியட்நாமுக்கான சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு இலங்கை வந்தடைந்தது என்று தெரிவிக்கப்படுகிறது.
ரூ.100 கோடியில் நாடாளுமன்றம் மறுசீரமைப்பு!!
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியானது 35 ஆண்டுகளுக்குப் பின்னர் 100 கோடிரூபா செலவில் மறுசீரமைப்புச் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்குரிய அமைச்சரவைப் பத்திரமானது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பொதுசெயலர் தம்மிக திசாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் கூரை, வாயில் கதவுகள், மலசல கூடம், நாடாளுமன்ற சபை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்கள் என்பன மறுசீரமைப்புச் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.பி. சலுகை அடுத்த வாரம் இலங்கைக்குக் கிடைக்கும்!!
இலங்கையின் ஏற்றுமதிப் பொருள்களுக்கு அமெரிக்காவால் வழங்கப்படுகின்ற ஜி.எஸ்.பி வரிச் சலுகை எதிர் வரும் 22ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனக் கைத்தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஜி.எஸ்.பி வரிச் சலுகையை 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க அரச தலைவர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் கையொப்பமிட்டிருந்தார். இந்த வரிச் சலுகை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
ஐக்கிய அமெரிக்காவின் முன்னுரிமைப்படுத்தலுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட திட்டம் (ஜி.எஸ்.பி) 2017ஆம் ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதியுடன் காலாவதியாகிய நிலையில் அதன் மீள் அனுமதியை அமெரிக்க காங்கிரஸ் வழங்கவில்லை.
எவ்வாறாயினும் மீண்டும் அந்த வரிச் சலுகையை அமெரிக்க அரச தலைவர் வழங்கியுள்ளார் – என்று ரிசாட் குறிப்பிட்டார்