பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (20.04.2018)

இலங்கை கிரிக்கட் தேர்தல் மே மாதம் 19ம் திகதி
இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 19ம் திகதி நடைபெறும் என்று இலங்கை கிரிக்கட்டின் தலைவர் திலங்க சுமதிபால கூறியுள்ளார்.
கூட்டு பாலியல் பலாத்காரத்திற்குள்ளான ஆசிபாவிற்கு நீதி கோரி கண்டனப் பேரணி!
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் கதுவா பகுதியில் 8 வயது சிறுமி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கு நீதி வழங்கக் கோரி கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னால் இன்று கண்டனப் பேரணி ஒன்று நடைபெறவுள்ளது.
ஐக்கிய சமாதான முன்னனி ஏற்பாடு செய்துள்ள இப் பேரணியில் இன மத பேதத்திற்கு அப்பால் இலங்கை வாழ் அனைவரும் கலந்து கொண்டு சிறுமி ஆசிபாவின் கொலைக்கு நீதி கிடைக்க ஒத்துழைப்பு வழங்குமாறு ஏற்பாட்டுக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்திய முதலீட்டாளர் கிழக்கு ஆளுநருடன் சந்திப்பு
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் பன்னாட்டு, உல்லாசப் பிரயாண மற்றும் விவசாயத் துறைகளிலாலான முதலீட்டாளர்கள் அமைப்பைச் சேர்ந்த ஆதித்யா ரெட்டி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவுக்கும் இடையே நேற்றுச் சந்திப்பொன்று இடம்பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தின் விவசாய உல்லாசப் பிரயாணத்துறையின் அபிவிருத்திக்கு, தெலுங்கானா மாநிலத்தின் தொழில்நுட்ப அறிவுப் பரிமாற்றம், மற்றும் முதலீடுகளை கிழக்கு மாகாணம் எதிர்பார்ப்பதாக ஆளுநர் ரோஹித போகொல்லாகம இதன்போது தெரிவித்தார்.
விவசாயத்துறையில், நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி விவசாய உற்பத்திகளுக்கான பெறுமதியை அதிகரிக்கும் செயற்பாட்டை மேற்கொண்டு, பன்னாட்டு சந்தைகளில் இப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்குரிய தந்துரோபாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்வில், கிழக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் தலைவர், கிழக்கு மாகாண அரச திணைக்களங்களின் செயலாளர்கள், கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் மற்றும் ஊடக செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.