பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.!! (20.04.2018)

அமைச்சரவை மாற்றத்தில் சிரேஷ்டத்துவம், திறமைக்கு முக்கியத்துவம்
அமைச்சரவை மாற்றத்தின் போது, ஐக்கிய தேசியக் கட்சியில் சிரேஷ்டத்துவம் மற்றும் திறமைக்கு முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய திறமையாக செயற்படும், ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களில், புதிதாக பிரதி அமைச்சுப் பதவி நால்வருக்கு வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இவர்களில், இம்முறை புதிதாக நாடாளுமன்றிற்கு தெரிவானவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
ஐக்கிய தேசியக் கட்சியின், அமைச்சர்களின் பெயர் பட்டியல், கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர், நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளார்.
இதற்கமைய, நாளை மறுதினம் (22) சகல பாடசாலைகளிலும், டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோரின் பங்குபற்றலுடன் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தை, கல்வி அமைச்சு கண்காணிக்கவுள்ளது.
மே 08 ஆம் திகதிக்கு முன்னர் தெரியவரும்
அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரும் எதிர்க்கட்சியுடன் இணைவது தொடர்பில், எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர், கடிதம் மூலம் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறிவிக்கவுள்ளதாக, தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்திருக்கும் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
அத்துடன், மே 08 ஆம் திகதிக்கு முன்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி, தேசிய அரசாங்கத்தில் தொடர்ந்து இருப்பதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் எனவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாதீனியத்தை ஒழிக்கத் தவறின் 2 ஆண்டுகள் சிறை!!
பாதீனியச் செடிகள் வளர்ந்துள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடவடிக்கைகள் உடனடியாக நடை முறைப்படுத்தப்பட்டன.
பாதீனியம் வளந்துள்ள காணியின் உரிமையாளருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை அல்லது 10 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடப்படும் என்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி மன்றாடி அதிபதி பி.குமாரரட்ணம் தெரிவித்தார்.
இதற்காக அதிகாரமளிக்கப்பட்டு 144 உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாணத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
காணிகளில் பாத்தீனியத்தை அழிக்காமல் வைத்திருப்பவர்களின் நடவடிக்ளை எடுப்பதற்கு அதிகாரம் வழங்கப்பட்டு அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கான தெளிவூட்டல் செயலமர்வு கிளிநொச்சி விவசாய பயிற்சி நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்வின் வளவாளராக கலந்து கொண்ட சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி மன்றாடி அதிபதி பி.குமாரரட்ணம் மேலும் தெரிவித்ததாவது; தாவரப் பாதுகாப்புச் சட்டத்தின் படி மனிதருக்கும், மண் வளத்துக்கும், பயிர்களின் வளர்ச்சிக்கும் பாத்தீனியம் தீங்கு விளைவிக்கும்.
ஆகவே அதனை வளவுகளில் இல்லாமல் கட்டுபடுத்த வேண்டும். வளவுகளில் இந்தச் செடியை வைத்திருப்பது இனம் காணப்பட்டால் அவற்றை அழிப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்படல் வேண்டும்.
வழங்கப்பட்ட கால எல்லைக்குள் அழிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட நடவடிக்கை தொடர்பான பிரதி எழுத்து மூலமாக உரிமையாளருக்கு வழங்கப்பட்டுக் கையொப்பம் பெறப்படும்.
அதன் பின்னரும் செடியை அழிக்காமல் விட்டால் அதிகாரம் உடைய அதிகாரி தொழிலாளர்களைக் கொண்டு அதனை அழித்து விட்டு வளவு உரிமையாளரிடம் இருந்து அதற்கான பணத்தைப் பெற்று வழங்க முடியும்.
இவ்வாறான நடவடிக்கைகள் நடைபெறுவதற்கு ஒத்துழைப்புக்களை வழங்காத விடத்து அவர் குற்றவாளியாகக் கருதப்பட்டால் இரண்டு வருட சிறை தண்டனை அல்லது 10 ஆயிரம் ரூபா தண்டம் அறவிட முடியும் –என்றார்.