;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4.!! (24.04.2018)

0

கடுகண்ணாவ வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

வரலாற்று முக்கியத்துவம் மிக்க கடுகண்ணாவ கற்குகை சந்தியிலுள்ள கற்பாறையில் கீறல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்காலிகமாக இதனூடான வாகன போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த பகுதியை சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கீறல் காரணமாக பாறையின் உட்பகுதியில் வெடிப்பும் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இதே வேளை வீதி அபிவிருத்தி அதிகார சபை தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்தில் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

1828 – 1830 ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு கண்டி வீதி அபிவிருத்தியின் போது இந்த கற்பாறை வீதி நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்தவின் வீட்டில் கலந்துரையாடல்

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஒன்றிணைந்த எதிர்கட்சியின் தலைவருக்குமிடையில் இன்று (24) மாலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் உள்ள மஹிந்தவின் உத்தியோகப்பூர்வ இலத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

புதிய நாடாளுமன்ற அமர்வின் போது, ஒன்றிணைந்த எதிர்கட்சி நாடாளுமன்றத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நெருக்கடிகள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வரத் தீர்மானித்துள்ள நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிக்கும் 20வது அரசியல் திருத்த சட்டமூலம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் மீண்டும் மலேரியா பரவ வாய்ப்பு

நுளம்புகளினால் ஏற்படக்கூடிய நோய்களுள் ஒன்றான மலேரியாவை, முற்றிலும் ஒழித்த நாடு இலங்கை என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்த போதும், மீண்டும் இலங்கையில், மலேரியா காய்ச்சல் ஏற்படக்கூடிய ஆபத்து உருவாகலாம் என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்தியா உட்பட இலங்கையின் அண்டைய நாடுகள் பலவற்றிலும், மலேரியாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அது இலங்கையிலும் பரவக்கூடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், அனில் ஜேசிங்க தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் செல்ல முயற்சித்த யாழ் இளைஞன் கைது

போலி ஆவணங்களைத் தயாரித்து சிங்கப்பூர் செல்ல முயற்சித்த இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம்- பருத்திதுறையைச் சேர்ந்த 25 வயதான இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞரின் பயணப்பொதியை பரிசோதித்த போது, அதில் சிங்கப்பூரிலிருந்து இங்கிலாந்து செல்வதற்கான விமான பயணச்சீட்டு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த இளைஞரிடம் இருந்து போலியாக தயாரிக்கப்பட்ட கடற்படையினரால் வழங்கப்படும் அடையாள அட்டையுடன் கூடிய புத்தகம் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக குறித்த இளைஞர் விமானநிலைய குற்றவிசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × four =

*