;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-5.!! (25.04.2018)

0

பேராதனை பல்கலைக்கழகத்தில் தீ…

பேராதனை பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பிரிவில் இன்று பிற்பகல் தீப்பரவியுள்ளது.

கண்டி நகர சபையின் தீயணைப்பு பிரிவால் தீ அணைக்கப்பட்டுள்ளதாகவும் மின்சார கசிவால் தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் எனவும் பேராதனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சேத விவரங்கள் இது வரை வெளியிடப்படவில்லை.

கொழும்பில் வெசாக் பாதுகாப்புக்காக 3000 பொலிஸார்

வெசாக் தினத்தை முன்னிட்டு பெருமளவான மக்கள் கொழும்பு நகருக்கு வருகைத் தருவதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி 1900 பொலிஸாரும், 1100 போக்குவரத்து பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கொழும்பில் 5 வெசாக் வலயங்களில் 11 வெசாக் தோரணங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்த அவர், குறித்த தினங்களில் வீதிவிபத்துக்கள் மட்டுமின்றி போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துக் காணப்படும் என்றும் தெரிவித்தார்.

50 இலட்சம் மதிப்புடைய பீடி இலை மூட்டைகள் மீட்பு

மன்னார் பாம்பன் குந்துகால் கடற்கரைப் பகுதியிலிருந்து 50 இலட்சம் ரூபாய் மதிப்புடைய உயர் தரம் வாய்ந்த பீடி இலை மூட்டைகள் இன்று (25) காலை மீட்கப்பட்டுள்ளன.

உயர் ரக பீடி இலைகள் மூட்டை மூட்டையாக கரை ஒதுங்கியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்து சுங்கப்பகுதியினரும் பொலிஸாரும் இணைந்து குறித்த மூட்டைகளை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட 25 பீடி இலை மூடைகள் உயர் ரகத்தை சேர்ந்தது எனவும் இதன் மதிப்பு சுமார் 50 இலட்சம் ரூபாய் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடலில் உள்ள மூட்டைகளை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் குறித்த மூட்டைகளை இலங்கைக்கு கடத்தியபோது, அப்படகு மூழ்கியதால் மூட்டைகள் தவறி கடலில் விழுந்திருக்கலாம் அல்லது கடற்படையினரினரின் ரோந்துப்பணியின் போது மூட்டைகளை கடலில் தள்ளிவிட்டு படகுடன் கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

3 வருடங்களில் கைப்பற்றப்பட்ட ஹெரோய்ன் தொகை

பொலிஸ் விசேட படையினரால் மேற்கொள்ளப்பட்ட, ஹெரோய்ன் போதைப் பொருள் கைப்பற்றல் தொடர்பிலான 3 வருட கணக்கெடுப்பில், 2015 தொடக்கம் 2018.04.22 ஆம் திகதி வரையில் 75 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோய்ன் போதைப் பொருள் இதுவரையில் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு 151 சுற்றிவளைப்புகளில், 169 பேர் கைது செய்யப்பட்டதுடன், 434 கிராம் அளவிலான ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில் 85 சுற்றிவளைப்புகளில் 94 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 535 கிராம் ஹெரோய்னும், 2017 ஆம் ஆண்டில் 299 சுற்றிவளைப்புகளில், 317 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 5396 கிராமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாண்டு 2018.04.22 ஆம் திகதி வரையில், 125 சுற்றிவளைப்புகளுடன் 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 1049 கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸ் விசேடப் பிரிவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 11 =

*