பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-6.!! (25.04.2018)

மீண்டும் திறக்கப்படவுள்ள உடவளவை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள்
உடவளவை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
உடவளவை நீர்த்தேக்க பிரதேசத்தில் தற்பொழுது கடும் மழை பெய்துவருகின்றது. இதனை தொடர்ந்து நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்துவருகின்றுது.
தற்பொழுது நீர்த்தேக்க அதிகரிப்பு தொடர்பாக மகாவலி அதிகார சபையின் செயற்பாட்டு பொறியியலாளர் சுஜீவ குணசேகர தெரிவிக்கையில், வான் கதவு திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
மேற்படி நீரை வளவ கங்கைக்கு திருப்பவேண்டி ஏற்பட்டது. இதனால் நதியை அண்டியுள்ள பகுதியிலுள்ளோர் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
விபத்தில் பெண் பலி: அறுவர் காயம்
புத்தளம் – பாலாவி பகுதியில் இன்று (25) மாலை இடம்பெற்ற விபத்தில், பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் அறுவர் காயமடைந்த நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் சேவா மாவத்தை பகுதியைச் சேர்ந்த மதுரா எனிசியா (வயது 65) என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புத்தளத்திலிருந்து சிலாபம் நோக்கிச் சென்ற லொறியொன்றும், சிலாபத்திலிருந்து புத்தளம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சிறிய ரக வான் ஒன்றும் மோதிக்கொண்டதிலேயே, இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.
புத்தளத்தைச் சேர்ந்த ஆறு பெண்கள், இன்று (25) குறித்த வானில் சிலாபம் – போவத்தைப் பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றுக்கு சென்றுவிட்டு மீண்டும் புத்தளம் நோக்கிப் பயணித்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
வான் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையால், வான் கட்டுப்பாட்டையிழந்து, எதிரே வந்த குறித்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் படுகாயமடைந்த வான் சாரதி உட்பட ஆறு பெண்களும் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
படகில் அவுஸ்திரேலியா சென்ற 8 பேர் கட்டுநாயக்கவில் கைது
கடல் மார்க்கமாக படகில் அவுஸ்திரேலியா சென்றிருந்த 8 பேர் மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இன்றைய தினம் (25) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 8 பேரையும், அவ்விடத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள், மினுவன்கொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, தலா 10,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், 100,000 ரூபாய் சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டனர்.
பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமையே உயிரிழப்புக்குக் காரணம்
சரியான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாமையே, ஹொரணை இறப்பர் தொழிற்சாலையில் ஐந்து பேர் உயிரிழப்பதற்கு காரணமாக அமைந்ததாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த தொழிற்சாலையில், இரசாயனப் பொருட்களை பயன்படுத்தும்போது தொழிலாளர்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய சரியான பாதுகாப்பு நடைமுறைகள் மிக நீண்டகாலமாகவே மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சின், சூழல் பாதுகாப்பு பிரிவின், சூழலியல் நிபுணர்கள் குறித்த தொழிற்சாலைக்கு கள விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சூழல் பாதுகாப்புத் தொடர்பிலான அனுமதிப்பத்திரம் குறித்த தொழிங்சாலைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த அனுமதிப்பத்திரம் 2017ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி முதல் இந்த வருடம் நவம்பர் 10ஆம் திகதி வரை செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கும், ஹேமந்த ஜயசிங்க, எனினும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு நடைமுறைகளை குறித்த தொழிற்சாலை நிர்வாகம் பின்பற்றவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.