;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4.!! (28.04.2018)

0

உடவளவை நீர்த்தேக்கத்தின் ஐந்து வான் கதவுகள் திறப்பு

உடவளவை நீர்த்தேக்கத்தின் ஐந்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உடவளவை நீர்த்தேக்க பிரதேசத்தில் தற்பொழுது கடும் மழை பெய்துவருகின்றதனை தொடர்ந்து நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்துவருகின்றது.

இதனால் தாழ் நிலப் பகுதியிலுள்ளோர் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய நல்லிணக்கத்தை சமூகத்திற்கு கொண்டு செல்ல பாடசாலை சிறந்ததோர் தளமாகும்

தேசிய நல்லிணக்கச் செய்தியை சமூகத்திற்கு கொண்டு செல்வதற்கு பாடசாலை சிறந்ததோர் தளமாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று (27) அனுராதபுரம் ஸாஹிரா கல்லூரியின் பொன் விழா மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

பாடசாலைக்குச் சென்ற ஜனாதிபதியை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். நினைவுப் படிகத்தை திரை திரை நீக்கம் செய்து வைத்த பின்னர் மூன்று மாடி வகுப்பறை கட்டிடத்தையும் மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி, பாடசாலை வளாகத்தை சுற்றி பார்வையிட்டார்.

இந்த புதிய வகுப்பறை கட்டிடத்தில் பாடசாலையின் பழைய மாணவரான கோசல ஜயரத்னவினால் 7 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறையையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.

ஜனாதிபதியின் வருகையை நினைவுகூரும் முகமாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்று ஒன்று நடப்பட்டது.

50 ஆண்டுகால வரலாற்றில் இக்கல்லூரியில் சேவை செய்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டப்பட்டதுடன், கல்லூரியின் முதலாவது அதிபர் மற்றும் முதலாவது ஆசிரியருக்கு ஜனாதிபதி விருதுகளை வழங்கினார்.

அமைச்சர்களான ரவுப் ஹக்கீம், துமிந்த திசாநாயக்க, சந்திராணி பண்டார, பி.ஹரிசன், வடமத்திய மாகாண ஆளுநர் எம்.பி.ஜயசிங்க அதிபர் ஏ.எம்.ஜௌபர் ஆகியோர் உட்பட ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

யானையுடன் லொறி மோதி விபத்து!!!

மஹியங்கனை – கிராந்துருகோட்டை பிரதான வீதி ஹத்தன்னாவ பிரதேசத்தில் நேற்று இரவு சிறிய ரக லொறி ஒன்று காட்டு யானை ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மெதிரிகிரிய – திவுலன்கடவல பிரதேசத்திலிருந்து வெல்லவாய நோக்கி பயணித்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறி சாரதி எதிரே வந்த யானையை கண்டவுடன் லொறியின் வேகத்தை கட்டுப்படுத்த முயற்சித்த பொழுது இவ் விபத்து சம்பவித்துள்ளது.

இந்நிலையில் லொறியில் 13 பேர் பயணித்துள்ளதாகவும், இதில் 4 பேர் காயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் நீண்ட காலமாக காட்டு யானைகளின் அட்டகாசம் காணப்பட்ட போதிலும் இதனால் பல விபத்து சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + 9 =

*