;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (01.05.2018)

0

விஜேதாஸ மற்றும் ரவிக்கும் அமைச்சுப் பதவிகள்?

முன்னாள் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷவுக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் உயர் கல்வி அமைச்சுப் பதவி வழங்கப்பட உள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு சுற்றுலா மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுப் பதவி வழங்கப்பட உள்ளதாக கடந்த நாட்களில் பேசப்பட்ட போதும் நேற்று (30) இரவு வரை எவ்வித இறுதித் தீர்மானமும் எட்டப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

புதிய அமைச்சரவை நியமனம் இன்று (01) காலை 10 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.

இன்று காலை 9.30 மணியளவில் ஜனாதிபதி செயகத்திற்கு வருகை தருமாறு அமைச்சர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவை நியமனத்தின் போது தற்போதிருக்கின்ற அமைச்சுப் பதவிகளிலும் மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சியின் பா.உ கூட்டம் இன்று

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் விஷேட கூட்டம் இன்று பிற்பகல் இடம்பெற உள்ளது.

இன்று மாலை 04.00 மணிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தகட்ட பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சியின் உயர் பதவிகளுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர் இடம்பெறுகின்ற முதலாவது கூட்டம் இதுவாகும்.

பஸ் விபத்து : 32 பேர் காயம்

கட்டுகஸ்தோட்டை – குருநாகல் வீதியில், கலகெதர – மடவல பகுதியில் இடம்பெற்ற யாத்திரிகள் பயணித்த பஸ் விபத்தில் 32 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்றைய தினம் (30) இடம்பெற்ற குறித்த விபத்தில் 32 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 15 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத கட்டடங்களை அகற்றும் பணி இடைநிறுத்தம்

மிரிஸ்ஸ கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை அகற்றும் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கடலோர பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.கே.பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத கட்டடங்களின் உரிமையாளர்கள், தாங்களே குறித்த கட்டடங்களை அகற்றுவதாக வாக்குறுதி அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் குறித்த கட்டடங்களை அகற்றக்கூடாது என இரண்டு பிரபல அரசியல்வாதிகள் கடலோர பாதுகாப்புத் திணைக்களத்திற்கு அழுத்தம் கொடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி நெதர்லாந்து சுற்றுலாப் பயணிகள் சிலர் மிரிஸ்ஸ கடற்கரையில் வைத்து தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, குறித்த கடற்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் 17 சட்டவிரோத கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டதோடு, அவற்றை மே முதலாம் திகதிக்கு முன்னதாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கடலோர பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்திருந்தது.

எனினும் இந்த விடயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபா, இந்த நடவடிக்கைகளால் சிறு வியாபாரங்களை நம்பியிருக்கும் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − 9 =

*