பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.!! (02.05.2018)

பதவியேற்க வருகை தரும் உறுப்பினர்கள்
அமைச்சர்களும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு வந்து கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் கூறினார்.
பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கான நியமனம் இன்று காலை 10.30 மணியளவில் ஜனாதிபதியினால் வழங்கப்பட உள்ளது.
காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தோட்டமக்கள் ஆர்ப்பாட்டம்
மாத்தளை – கம்மடுவ – ஓப்பல்கல தோட்டம் கீழ் பிரிவு மக்கள் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.
தேர்தல் காலங்களில் வாக்குறுதிகள் வழங்கிய அரசியல் பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தொழிலாளர் தினத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாக மாத்தளை – கம்மடுவ – ஓப்பல்கல தோட்டம் கீழ் பிரிவு மக்கள் தெரிவித்தனர்.
மாத்தளை – கம்மடுவ – ஓப்பல்கல தோட்டம் கீழ் பிரிவிலுள்ள 40 குடும்பங்களுக்கு, 1992 ஆம் ஆண்டு வீடமைப்பு அதிகார சபையினால் தனி வீடுகள் நிர்மாணித்து வழங்கப்பட்டன.
இந்த வீடுகளுக்கான ஒரு பகுதி நிதியை அரசாங்கம் வழங்கியதுடன், மிகுதி நிதி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து அறவிடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து நிதி அறவிடப்பட்ட பின்னர், காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படும் எனவும் அப்போது வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும், வீடுகளுக்காக தாம் செலுத்த வேண்டிய நிதியை முழுமையாக செலுத்தி 5 வருடங்கள் கடந்த போதிலும், இதுவரையில் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாத்தளை – கம்மடுவ – ஓப்பல்கல தோட்டம் கீழ் பிரிவு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை ஒரு சிறந்த முன்னுதாரணம் – ஐ.நா. அதிகாரி பாராட்டு
சமாதானத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் சிவில் சமூகம் அரசாங்கத்துடன் எவ்வாறு இணைந்து செயற்பட முடியும் என்பதற்கான சிறந்த உதாரணமாக இலங்கை விளங்குகின்றது என ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் மிரோஸ்லாவ் லஜ்கக் தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் தலைமையகத்தில் இடம்பெற்ற சமாதானம் குறித்த நிகழ்வொன்றில் கருத்துதெரிவித்துள்ள மிரோஸ்லாவ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தனிநபர் ஒருவர் எவ்வாறு நாட்டின் சமாதானத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளிற்கு உதவமுடியும் என்பதற்கான சிறந்த உதாரணமாக இலங்கையை சேர்ந்த விசாகா தர்மதாச விளங்குகின்றார் எனவும் பொதுச்சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான நல்லிணக்க மற்றும் சமாதானாத்தை கட்டியெழுப்பும் திட்டங்களை உருவாக்குவதற்கு இலங்கையின் சிவில் சமூகம் எவ்வாறு பங்களிப்பு வழங்கியது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமித் உட்பட 27 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு.!
கண்டி திகன பகுதியில் கடந்த மாதம் ஏற்பட்ட கலவர நிலை தொடர்பாக கைது செய்யப்பட்ட அமித் வீரசிங்க உள்ளிட்ட 27 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கண்டி திகன பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட அமித் வீரசிங்க உள்ளிட்ட 27 பேரின் விளக்கமறியலை தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடித்துள்ளது.
சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.