;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.!! (04.05.2018)

0

போதை பொருட்களுடன் மூவர் கைது

ஒருகொடவத்தையில் கொள்கலன் ஒன்றை பரிசோதனையின் போது 17 இலட்சத்து 76 ஆயிரம் பெறுமதியான போதை பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் 232 வெளிநாட்டு மதுபான போத்தல்கள், 253 வைன் போத்தல்கள் மற்றும் 46 பியர் போத்தல்களுடன் ஒரு தொகை சிகரெட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட ஹசீஸ் போதை பொருள் சுமார் 10 இலட்சமாகும், வெளிநாட்டு மதுபான போத்தல்கள் சுமார் 7 இலட்சத்து 76 ஆயிரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட பொருட்களின் முழுமையான பெறுமதி 17 இலட்சத்து 76 ஆயிரம் என சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஒருகொடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு

நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணை எதிர்வரும் ஜூன் 06ம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கீழ் இயங்குகின்ற ஶ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரசின் தலைவராக இருந்த போது அந்த தொழிற்சங்கத்துக்கு சொந்தமான 39 இலட்சம் ரூபா நிதியை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சட்டப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ நிகழ்வொன்று இன்று இடம்பெற இருப்பதால் வழக்கை பிற்போடுவதாக திறந்த நீதிமன்றில் நீதிபதி அறிவித்துள்ளார்.

மர்மமான முறையில் உயிரிழந்துள்ள யானை

ஹொரவ்பொத்தான – துடுவெவ வனப்பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள யானை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த யானை சுமார் 9 அடி உயரமான 25 வயதான அளவில் இருக்கலாம் என அது, ஒரு மாதத்திற்கு முன்னர் இறந்திருக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

கிராமவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய வனவிலங்கு அதிகாரிகளால் நேற்று பிற்பகல் இந்த யானையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த யானையின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை அநுராதபுரம் – பண்டுலகம வனவிலங்கு மருத்துவ காரியாலயத்தின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக ஹொரவ்பொத்தான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × two =

*