;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.!! (05.05.2018)

0

அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக அநுருத்த பொல்கம்பொல

அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக அநுருத்த பொல்கம்பொல நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

2 கோடி ரூபா பணத்தை முற்பணமாக பெறும் போது கைது செய்யப்பட்ட அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பி. திசாநாயக்க அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு அநுருத்த பொல்கம்பொல நியமிக்கப்பட்டுள்ளார்.

களஞ்சியசாலைகளில் இருக்கின்ற உரத்தை விநியோகிக்க ஆலோசனை

தற்போதிருக்கின்ற உரப் பிரச்சினைக்கு சரியான தீர்வாக, களஞ்சியசாலைகளில் இருக்கின்ற உரத்தை விரைவாக விநியோகம் செய்யுமாறு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நேற்றைய தினம் அமைச்ரசரவை அதிகாரிகள் மற்றும் லக் பொஹர, கொமர்ஷல் பொஹர நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து அமைச்சர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாட்டில் காணப்படுகின்ற உரப் பிரச்சினை காரணமாக பல்வேறு விதமான உரம் விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும், உரம் வழங்கும் போது அரசாங்கம் நிர்ணயித்துள்ள விலை மற்றும் நிவாரண விலையின் கீழ் வழங்குமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன் களஞ்சியசாலைகளில் இருக்கின்ற உரத்தை ஒரு ஒழுங்கு முறையின் கீழ் விநியோகம் செய்யுமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ​இன்னும் தீர்மானிக்கவில்லை

அரசியலமைப்பின் 20வது சீர்திருத்தத்திற்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என்று ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியால் தனிப்பட்ட பிரேரணையாக 20வது அரசியலமைப்பு சீர்திருத்த யோசனை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

எனினும் 20வது அரசியலமைப்பு சீர்திருத்த யோசனை சம்பந்தமாக இதுவரை எதுவித தீர்மானமும் எடுக்கவில்லை என்று ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீரவிடம் அத தெரண செய்திப் பிரிவு வினவிய போது, அந்த யோசனை இதுவரை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறினார்.

ஆகவே இந்த யோசனை பாராளுமன்றத்திற்கு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் தீர்மானிப்பதாக அவர் கூறினார்.

நாளை சில பிரதேசங்களில் வெப்பமான காலநிலை

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளைய தினம் உஷ்னமான காலநிலை காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் மாத்தளை, குருணாகல், கம்பஹா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களின் சில பிரதேசங்களிலும் இவ்வாறு உஷ்னமான காலநிலை காணப்படும் என்று அந்த திணைக்களம் கூறியுள்ளது.

இதன் காரணமாக அதிகமாக தண்ணீர் அருந்துமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இன்று பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மத்திய, தென், ஊவா, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சுமார் 100 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீரில் மூழ்கி பாடசாலை மாணவர் பலி

அகுரெஸ்ஸ – அதுரலிய – கதனாவல கங்கையில் நீரில் மூழ்கி பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.

அதுரலிய கல்லூரியில் கல்வி கற்ற 16 வயதுடைய மாணவரே நண்பர்களுடன் கங்கையிற்கு நீராடச் சென்றிருந்த போது நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில், குறித்த பிரதேச மக்கள் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் பின்னர் மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காங்கேசன் துறை கடற் பரப்பில் 14 இலங்கை அகதிகள் கைது!!!

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் நாட்டிற்குள் வந்த 14 இலங்கை அகதிகள் காங்கேசன்துறை வடக்கு கடற் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − eight =

*