;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (09.05.2018)

0

ஆர்பாட்டக்காரர்களுக்கு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

சய்டம் பிரச்சினை தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற அதிகாரப் பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்வதானால் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்காமலும், சொத்துக்களை சேதப்படுத்தாமலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சில பிரதேசங்களுக்கு 10 மணித்தியால நீர் வெட்டு

கொலன்னாவ உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு நாளைய தினம் (10) பத்து மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி கொலன்னாவ, மீதொட்டமுல்ல, சேதவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

நாளை பிற்பல் 02.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரையான காலப்பகுதியில் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

நீர்க் குழாயில் மேற்கொள்ள உள்ள அத்தியவசிய திருத்தம் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு வோர்ட் பிளேஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது

சயிட்டம் நிறுவனத்திற்கு எதிராக பல்கலைகழக மாணவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு வோர்ட் பிளேஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

அத்துடன் அந்தப் பகுதி வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் கூறினார்.

சயிட்டம் நிறுவனத்திற்கு எதிராக அனைத்துப் பல்கலைகழக மாணவர்கள் இன்று பகல் முதல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மஹிந்தானந்தவின் சாரதியிடம் சாட்சி விசாரணை

மஹிந்தானந்த அளுத்கமகே அமைச்சராக இருந்த போது, சட்டவிரோதமாக பெறப்பட்டதாக கூறப்படும், 27 மில்லியன் ரூபா பணத்தை பயன்படுத்தி, கொழும்பு – கிங்சி வீதியில் வீடொன்றைக் கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பான வழக்கு கெழும்பு மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கின் சாட்சி விசாரணை இன்று (09) நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பிரதிவாதியான மஹிந்தானந்த அளுத்கமகேவின் சாரதியாக பணியாற்றிய வசந்த ராஜபக்‌ஷவிடம் அரச தரப்பு பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் துசித் முதலிகே வாக்குமூலம் பதிவு செய்து கொண்டார்.

இந்த வழக்கின் அடுத்த கட்ட சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 26ம் திகதி இடம்பெறவுள்ளது.

மின்னுற்பத்தி திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது

நீண்டகால மின்னுற்பத்தி திட்டத்துக்கு இன்றைய தினம் (09) கூடிய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி கிடைக்கபெற்றுள்ளதாக, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எனினும், குறைந்த செலவில் மின்சாரத்தை பெறும் திட்டத்துக்கு இன்னமும் அனுமதி கிடைக்காதமையை முன்னிட்டு, மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் சட்டப்படி வேலையில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரிய அமைச்சர் பொன்சேகா

நிலையான அபிவிருத்தி மற்றும் பிரதேச அபிவிருத்தி , வனஜீவராசிகள் அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இன்று பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மன்னிப்புக்கோரியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று பகல் இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பு நிறைவுற்றதன் பின்னர் அமைச்சர் சரத் பொன்சேகா மற்றும் சிலர் சென்று இவ்வாறு மன்னிப்புக் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

அமைச்சர் சரத் பொன்சேகா கடந்த 3ஆம் திகதி தனது புதிய அமைச்சினை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஜனாதிபதியை விமர்சிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து கடந்த 7ஆம் திகதி நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் இதுதொடர்பில் ஜனாதிபதியும் விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டத்தால் நோயாளர்களை பார்வையிட வந்தோருக்கு பாரிய சிரமம்

கொழும்பு வோட் பிளேஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டமையால், மாலை 5 மணிக்கு நோயாளர்களை பார்வையிடுவதற்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வருகைத்தந்தோர், பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த வீதியை தற்காலிகமாக மூட பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 5 =

*