;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (10.05.2018)

0

02 கோடிக்கும் அதிக பெறுமதியான தங்க பிஸ்கட்கள் விமான நிலையத்தில் பறிமுதல்

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஒரு தொகை தங்கத்தை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து வருகை தந்த சந்தேகநபரின் பயப் பொதியில் இருந்து இந்த தங்க பிஸ்கட்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரிடம் இருந்து 02 கிலோவும் 100 கிராம் நிறையுடைய 20 தங்க பிஸ்கட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

46 வயதுடைய கண்டி, தெய்யன்வல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் விமான நிலையப் பொலிஸாரால் மேலதிக விசாரணைகளுக்காக சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் கொள்கை சம்பந்தமாக இன்று விவாதம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்மொழியப்பட்ட அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் சம்பந்தமான பாராளுமன்ற விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.

இன்று காலை 10.30 மணிக்கு பாராளுமன்ற விவாதம் ஆரம்பிக்கப்பட உள்ளது.

கடந்த 08ம் திகதி பாராளுமன்றத்தின் இரண்டாம் அமர்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதியினால் சமர்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் சம்பந்தமாக பாராளுமன்ற விவாதம் அவசியம் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு அமைவாக இன்றைய விவாதம் இடம்பெற உள்ளது.

அதன்படி இன்றைய தினம் இது சம்பந்தமாக விவாதம் இடம்பெற உள்ளது.

மின்னல் தாக்கி ஒருவர் பலி

மின்னேரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்புறுயாய பகுதியில் மின்னல் தாக்கி நபரொருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

61 வயதான நபரே நேற்று நீரிரைத்துக்கொண்டிருந்த வேளையில் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கின்றனர்.

அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை

வெலிகம – மிரிஸ்ஸ, தெஹிவளை – கல்கிஸ்ஸை மற்றும் நீர்கொழும்பு கடற்கரைப் பிரதேசங்களில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை இந்த மாதத்திற்குள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக கடற்கரை பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் சுற்றுலாத்துறையினர் அதிகளவில் சுற்றுலா மேற்கொள்கின்றனர்.

இதனைக் கருத்திற்கொண்டு குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கடற்கரை பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களில் ஒத்துழைப்புடன் இந்தப் பணிகளை முன்னெடுப்பதாக அதன் பணிப்பாளர் பீ.கே.பிரபாத் சந்தரசிறி தெரிவித்தார்.

நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் 67 வாக்குகளால் நிறைவேற்றம்

நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்களுடன் 67 மேலதிக வாக்குகளால், நேற்று (09) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

8ஆவது நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் 2ஆம் அமர்வு, நேற்று (09) பிற்பகல் 1 மணிக்கு, ஆரம்பமானது. இதன்போது, நீதித்துறைத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் நடைபெற்றது.

இதையடுத்து அந்த திருத்தச் சட்ட மூலம், மாலை 6.30க்கு, வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன்போது, ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

இவ்வாக்கெடுப்பு, இலத்திரனியல் முறை மூலம் இடம்பெற்றது. இதில், காமினி லொக்குகே, பந்துல குணவர்தன, துரைரட்ணசிங்கம் ஆகியோர் வாய்மூல வாக்களிப்பைச் செய்தனர்.

இவ்வாக்கெடுப்பில், ஜே.வி.பியினர் கலந்துகொள்ளாததுடன், அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + 20 =

*