;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (12.05.2018)

0

கொள்கலன் கட்டணமும் அதிகரிக்கிறது

கொள்கலன் போக்குவரத்துக்கான கட்டணம் 15 வீதத்தால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 20ம் திகதி முதல் இந்தக் கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

தேசிய அரசாங்கத்தில் தொடர்வதா? 17ம் திகதி இறுதி தீர்மானம்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 17ம் திகதி இடம்பெற உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி கூறினார்.

அந்தக் கூட்டத்தில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தேசிய அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடிப்பதாக என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார்.

அதேநேரம் கட்சியின் அனைத்து பதவிகளிலும் சீர்திருத்தம் செய்து கட்சியின் முழுமையான மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் சந்திம வீரக்கொடி கூறினார்.

17ம் திகதியின் பின்னர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான முன்னணி ஒன்றை உருவாக்கும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்படும் என்று சந்திம வீரக்கொடி கூறினார்.

காட்டு யானைப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு

காட்டு யானைகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக வன ஜீவராசிகள் அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

பொலன்னறுவை பிரதேசத்தில் மக்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

பொலன்னறுவை, தியபெதும பி​ரதேசத்தில் சில தினங்களுக்கு முன்னர் காட்டு யானையில் தாக்குதலில் உயிரிழந்த நபரின் வீட்டுக்கு வன ஜீவராசிகள் அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா மற்றும் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும ஆகியோர் நேற்று விஜயம் செய்துள்ளனர்.

உயிரிழந்தவரின் உறவினர்களை சந்தித்த பின்னர் பிரதேசவாசிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

யானை, மனித மோதல் மிகவும் உக்கிரமடைந்த நிலையில் இருப்பதாகவும், இதற்கு மக்களுடன் இருந்து தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் இதன்போது அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

நாடளாவிய ரிதியில் 2051 பேர் கைது

நாடளாவிய ரீதியில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் மொத்தமாக 2051 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (11) இரவு 11 மணி முதல் இன்று (12) அதிகாலை 03.00 மணி வரை நாடளாவிய ரீதியில் இந்த விஷேட சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1329 பேரும் குற்றச் செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் 151 பேரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

இதுதவிர 571 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றங்களை மட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இந்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

இன்று வளிமண்டவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள காலநிலை விபரம்

நாடு முழுவதும் மாலை வேளைகளில் மழை பெய்யும் நிலை காணப்படுவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் குருணாகல் மாவட்டங்களில் சில பிரதேசங்களிலும் 75 மில்லிமீட்டர் அளவு மழை வீழ்ச்சி பதிவாகலாம் என்று அந்த திணைக்களம் கூறியுள்ளது.

இன்று நண்பகல் 12.00 மணிக்கு வௌியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும், அதன்போது காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் கடல் அலையில் சீற்றம் சற்று அதிகமாக இருக்கும் என்றும், புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோர பிரதேசங்களில் கடல் அலைகள் 2 – 2.5 மீட்டர் உயரத்திற்கு எழலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலை எதிர்வரும் 15ம் திகதி வரை காணப்படலாம் என்று வளிமண்டவியல் திணைக்களம் வௌியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × three =

*