14 May 2018 0 Comments Report

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (14.05.2018)

காணாமல் போன பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு

சில நாட்களுக்கு முன்னதாக காணாமல் போயிருந்த வீரகொட்டிய பொலிஸில் பணிபுரிந்த பொலிஸ் அதிகாரியொருவரின் சடலம் இன்று வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

ஹெட்டியாராச்சி பிரேமதாச எனும் 57 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 11 ஆம் திகதி வீட்டில் இருந்து வெளியில் சென்ற நபரை காணவில்லை என வீட்டாரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அமித் உட்பட 35 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

கண்டி, திகன பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான அமித் ஜீவன் வீரசிங்க மற்றும் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 35 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை இன்று (14) தெல்தெனிய நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அவர்களை மே 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதான சந்தேகநபரான அமித் வீரசிங்கவை அநுராதபுரம் சிறைச்சாலைக்கும் ஏனைய சந்தேகநபர்களை அவர்கள் இருந்த சிறைச்சாலையிலும் வைக்க நீதவான் எம்.எம் பரீக்டீன் உத்தரவிட்டுள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபரான அமித் வீரசிங்க மார்ச் 08 ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு

ஊவா மாகாண முதலமைச்சர் தன்னை முழங்காலில் வைத்து தனது அடிப்படை உரிமைகளை மீறியதாக பதுளை தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் ஊவா மாகாண கல்வி செயலாளர் உள்ளிட்ட எட்டு பேரை பிரதிவாதிகளாக உள்ளடக்கி தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஆர்.பாவணி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

ஊவா மாகாண முதலமைச்சரின் ஆதரவாளர் ஒருவருடைய பிள்ளையை பாடசாலையில் சேர்த்துக்கொள்ளாத காரணத்தால் தன்னை முழங்காலில் வைத்து மனிதாபிமானமற்ற விதத்தில் நடத்தியதாக மனுதாரரான அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் தன்னை அச்சுறுத்தியதாகவும், இதனால் தான் முழந்தாளிட்டு மன்னிப்பு கேட்டதாகவும் அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் முதலமைச்சர் மீது வழக்கு தொடரப்பட்டாலும், அதில் எந்தவொரு நீதியும் தனக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் செயலால் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டதாக தீர்ப்பு வழங்குமாறும் அதற்காக உரிய நட்டஈட்டை பெற்றுத்தருமாறும் மனுதாரரான அதிபரினால் உயர் நீதிமன்றத்தில் குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.


Post a Comment

*