15 May 2018 0 Comments Report

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (15.05.2018)

முச்சக்கரவண்டி கவிழ்ந்ததில் மூவர் பலி

மாத்தறை, ரோதும்ப பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று கவிழ்ந்ததில் பெண்ணொருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (14) குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பல பகுதிகளில் மின்சாரத்தடை

பியகம, பன்னிபிட்டிய இடையிலான மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கொழும்பை சுற்றியுள்ள சில பகுதிகளுக்கு மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது.

ஶ்ரீஜயவர்தனபுர, தெஹிவளை, பன்னிபிடிய, இரத்மலானை ஆகிய பகுதிகளே இவ்வாறு மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

220KV மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளதாக, மின்வலு மற்றும் மீள் புத்தாக்க சக்தி அமைச்சகத்தின் ஊடக பேச்சாளர் சுலக்சன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், மின்சாரத்தடையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரத்தை விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஊடக பேச்சாளர் சுலக்சன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துடன் தொடர்ந்து பயணிப்பதா? இல்லையா? தீர்மானம் நாளை மறுதினம்

அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்திருப்பதா இல்லையா என்பது தொடர்பில் நாளை மறுதினம் (17) வியாழக்கிழமை நடைபெறவுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படுமென அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுதந்திரக் கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டுமென, அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 சு.க உறுப்பினர்கள் குழு, தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையில், அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டுள்ள மற்றுமொருத் தரப்பு அரசாங்கத்தில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுமென தெரிவித்து வருகின்றது.

இந்நிலையில் நாளை மறுதினம் இரவு 7 மணியளவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதியின் உத்தியோபூர்வ இல்லத்தில், நடைபெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இதுத் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், தேசிய அரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேற வேண்டுமென்ற கோரிக்கையை, அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேர் கொண்ட சு.க குழு செயற்குழுக்கூட்டத்தின்போது வலியுறுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அந்த கோரிக்கை உள்ளிட்ட, 15 முக்கிய யோசனைகள் அடங்கிய கடிதமொன்றை இன்றைய தினம் (15) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கவுள்ளதாக அந்தக் குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

*