;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (16.05.2018)

0

பஸ் உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பஸ் சங்கம்

இன்று நள்ளிரவு முதல் தனியார் பஸ் உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட உள்ள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு கொழும்பு மாவட்ட பஸ் பயணிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள அந்த சங்கம் இந்த விடயத்தைக் கூறியுள்ளது.

அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 6.56% பஸ் கட்டண அதிகரிப்பை தமது சங்கம் ஏற்றுக் கொள்வதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் கூறுவது போல் நூற்றுக்கு 10% ஆல் அல்லது 20% ஆல் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதை தமது சங்கம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது என்றும், குறைந்தபட்ச கட்டணத்தை 15 ரூபாவாக அதிகரிப்பது ஒருபோதும் நியாயமானதல்ல என்றும் அந்த சங்கம் கூறியுள்ளது.

இதன் காரணமாக இன்று நள்ளிரவு முதல் தனியார் பஸ் உரிமையாளர்கள் மேற்கொள்ள தீர்மானித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தமது சங்கம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அவர்கள் கோருவது போன்று கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் கடுமையான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என்றும் அந்த சங்கம் கூறியுள்ளது.

இ.போ.ச ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டது

இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் இன்று முதல் இரத்து செய்யப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

அதன்படி இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகள், பஸ் நடத்துனர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் உள்ளிட்ட அனைவரது விடுமுறைகளும் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ள காரணத்தால் அவர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

தனியார் பஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிடும் வரையில் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களின் விடுமுறைகள் அனைத்தும் இரத்து செய்யப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

தனியார் பஸ் உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு முகங்கொடுக்கும் விதமாக 24 மணித்தியாலங்களும் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

நாளாந்த கால அட்டவணைக்கு அமைவாக அல்லாமல் பயணிகளின் தேவைக்கு அமைய இ.போ.ச பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன கூறினார்.

அரச வைத்தியர்கள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம்

அரச வைத்தியர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை (17) காலை 8 மணி முதல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூருடன் இலங்கை அரசு செய்துகொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்திலேயே இந்த வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டண அதிகரிப்புக்கமைய புதிய பஸ் கட்டண விபரம் இதோ

6.56 வீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை நேற்று (15) அனுமதி வழங்கியிருந்தது. எனினும் குறைந்தபட்ச கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கவில்லை.

அதன்படி கட்டண அதிகரிப்புக்கமைய புதிய கட்டண விபரம் போக்குவரத்து ஆணைக்குழுவால் வௌியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு,

பழையது—புதியது
10 — 10
13 — 14
17 — 18
21 — 23
25 — 27
29 — 31
34 — 36

கொழும்பு வோர்ட் பிளேஸ் வீதி மூடப்பட்டது

கொழும்பு வோர்ட் பிளேஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

அப்பிரதேசத்தில் அனைத்துப் பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தால் மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டம் காரணமாகவே அந்த வீதி முடப்பட்டுள்ளது.

அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில்

இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்ட சம்பவத்தில் அதற்கு உடந்தையாக இருந்த சந்தேகத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + 4 =

*