பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (29.05.2018)

ஹெரோயினுடன் வைத்தியர் ஒருவர் கைது
ஆயுர்வேத வைத்தியர் ஒருவர் ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸ் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து கினிகத்தேனை பேரகாமுள்ள பகுதியிலுள்ள உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து 250 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீட்கப்பட்ட போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
விடுமுறையின் போது விடைத்தாள்களை திருத்த நடவடிக்கை
கல்வி பொதுதராதர சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளின் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகளை, பாடசாலை விடுமுறைகளின் போது மேற்கொள்வதற்கு யோசனையொன்றை முன்வைத்துள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்தார்.
நேற்று (28) அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பரீட்சை பெறுபேறுகள் வெளியாவதில் ஏற்படும் வீணான காலதாமதங்களைக் கருதியே, இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மினிசூறாவளியால் 60 பேர் பாதிப்பு
நாவலப்பிட்டி கெட்டபுலா புதுக்காடு தோட்டத்தில், இன்று (29) காலை ஏற்பட்ட மினிசூறாவளி காரணமாக 14 தொழிலாளர் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.
இதன் காரணமாக பாதிக்கப்பட்ட 60 பேர், கெட்டபுலா இல- 02 தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குடியிருப்புகளின் கூரைகள் காற்றில் அள்ளுண்டுச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளை, தோட்ட நிர்வாகம் செய்து வருவதோடு, மாற்று நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.
மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது
சியம்பலாண்டுவ பிரதேசத்தில், ஹெட ஓயாவில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர்கள் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களெனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் மண் அகழ்வுக்காகப் பயன்படுத்திய டிப்பர் வாகனமொன்றும், பெக்கோ இயந்திரமொன்றும் மற்றும் டிரக்டர் வாகனங்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட நால்வரையும் நாளை (30) சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.